ஆபாசப் படம் பார்ப்பவர்கள் பட்டியல் பற்றி ஏ.டி.ஜி.பி விளக்கம்

ஆபாசப்படம் பார்ப்பவர்கள் லிஸ்ட் எடுக்கப்பட்டு முறையாக அழைத்து விசாரிக்கப்படுவார்கள்; காவலர்கள் செல்போனில் கூப்பிட்டு மிரட்ட முடியாது என்று ஏ.டி.ஜி.பி ரவி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆபாச படம் பார்ப்பவர்களின் 3000 பேர் கொண்ட பட்டியல் தயாராக உள்ளதாகவும், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவு கூடுதல் காவல் துறை இயக்குனர் ரவி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

பலர், தாங்கள் அந்தப் பட்டியலில் உள்ளோமோ..? அல்லது சிக்கி விடுவோமோ…? என்ற அச்சத்தில் உள்ளனர்.

மேலும் பலரும் ஆபாச படம் பார்ப்பதை தவிர்த்து வருகின்றனர்.

இந்த நடவடிக்கை குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு மீம்ஸ்களும், வீடியோக்களும் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.

விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் இவ்வாறு செயல்பட்டாலும், இந்த காவல்துறையின் எச்சரிக்கையை தவறாக பயன்படுத்திக் கொண்டு, காவல்துறையினர் செல்போன் எண்களுக்கு தொடர்பு கொண்டு மிரட்டி பணம் பறிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இதற்கு ஆதாரமாக திருநெல்வேலி காவலர் ஒருவர் ஆபாச படம் பார்த்ததாக இளைஞர் ஒருவரை செல்போனில் விசாரிப்பது போல் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இவ்வாறு மிரட்டுவது குறித்து காவல்துறை தரப்பில் கேட்டபோது, 3000 பேர் கொண்ட பட்டியலில் உள்ளவர்கள் மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டு, தகவல் அறிக்கை பதிவு செய்த பின்பு முறையாக அழைத்து விசாரிக்கப்படுவார்கள் என்றும்; இதுபோன்று திடீரென செல்போனில் தொடர்பு கொண்டு காவலர்கள் விசாரிக்க மாட்டார்கள் எனவும் காவல் துறை கூடுதல் இயக்குனர் ரவி தெரிவித்துள்ளார்.

காவல்துறை இது போல தனிப்பட்ட நபருக்கு எச்சரிக்கை விட முடியாது.

முறையாக லிஸ்ட் எடுக்கப்பட்டு அவர்கள் வீட்டுக்கு முறைப்படி சம்மன் அனுப்பப்படும். வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே