தஞ்சாவூர் : கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 10 பேர் டிஸ்சார்ஜ்

கரோனாவால் பாதிக்கப்பட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடைந்த மேலும் 10 பேர் சனிக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 55 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இவர்களில் ஏற்கெனவே ஏப். 16-ஆம் தேதி ஒருவர், ஏப். 21-ஆம் தேதி 3 பேர், 23-ஆம் தேதி 3 பேர், 24-ஆம் தேதி ஒருவர் என மொத்தம் 8 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்ததால், வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இவர்களைத் தொடர்ந்து, அதிராம்பட்டினத்தை சேர்ந்த 7 பேரும், தஞ்சாவூர், நெய்வாசல், திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை கிராமத்தைச் சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 10 பேர் குணமடைந்ததைத் தொடர்ந்து, மருத்துவமனையிலிருந்து சனிக்கிழமை விடுவிக்கப்பட்டனர். 

இவர்களில் 6 பேர் பெண்கள் நான்கு பேர் ஆண்கள்.

இவர்களுக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் குமுதா லிங்கராஜ், மருத்துவ கண்காணிப்பாளர் மருது துரை உள்ளிட்டோர் சான்றிதழ், பழங்கள் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், வீட்டில் 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுரை வழங்கினர்.

மாவட்டத்தில் நோய்த்தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18 -ஆக உயர்ந்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே