குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக அசாமில் போராட்டம் எழுந்த நிலையில் அம்மாநிலத்தில் 24 மணி நேரத்துக்கு இணையம் துண்டிக்கப்பட்டுள்ளது. கவுகாத்தியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் மத துன்புறத்தல்களுக்கு ஆளாகி இந்தியாவில் தஞ்சம் புகுந்த இஸ்லாமியர்கள் அல்லாத இதர மதத்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்யும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு நேற்றைக்கு முந்தைய தினம் மக்களவையில் நிறைவேறியது.

இந்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

நேற்று திரிபுராவில் போராட்டம் கட்டுக்கடங்காமல் எழுந்த நிலையில், நேற்று மதியம் 2 மணியிலிருந்து நாளை மதியம் 2 மணி வரை 48 மணி நேரத்துக்கு இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

இந்தநிலையில், தற்போது அசாமிலும் 24 மணி நேரத்துக்கு இணையத் தொடர்பைத் துண்டிக்கப்படும் என்று அம்மாநில ஆளுநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

10 மாவட்டங்களில் இணையத் தொடர்பு துண்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத் தலைநகரில் இணையத் தொடர்பு துண்டிக்கப்படவில்லை. பல மாவட்டங்களில் மதுக்கடைகளையும் அடைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

அதனால், காவல்துறையினர் புகைக்குண்டுகளை வீசி போராட்டங்களைக் கலைத்துவருகின்றனர்.

காவல்துறையினர் தாக்கியதில் போராட்டக்காரர்கள் பலர் காயமடைந்துள்ளனர் என்று மாணவர் அமைப்பின் தலைவர் புகார் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் அதிகரித்துவரும் நிலையில், 5,000 ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதனால் வடகிழக்கு மாநிலங்களில் பதற்றம் நிலவுகிறது.

திப்ருகரில் மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்த்தில் வன்முறை வெடித்தது.

போராட்டம் காரணமாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஜோராபட் பகுதியில் வீதிகளில் குவிந்த மாணவர் அமைப்பினர் மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.

சோனிப்பட் மாவட்டத்தில் வன்முறை அபாயம் காரணமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த 48 மணி நேர முழு அடைப்பால் அசாமில் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி இருக்கிறது.

கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தேமாஜி, லக்மிபுர், தின்சுக்கியா, உதல்கிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே