ஆஷ்ரம் பள்ளி விவகாரத்தில் வாடகை பாக்கி உள்ளது என்ற தகவலில் அணு அளவும் உண்மை இல்லை என லதா ரஜினிகாந்த் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸ் அருகே நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ஆஷ்ரம் பள்ளியை வாடகை கட்டடத்தில் நடத்தி வருகிறார்.

இதன் உரிமையாளர் வெங்கடேஷ் வரலு என்பவருக்கு லதா ரஜினிகாந்த் சரிவர வாடகை பணம் கொடுக்கவில்லை என்று புகார் எழுந்தது.

இதனையடுத்து, இந்த விவகாரம் உயர் நீதிமன்றத்திற்கு சென்றது. இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, சரியான நேரத்தில் உரிமையாளரிடம் வாடகை அளிக்கவேண்டும் என்று லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதனிடையே, கடந்த ஏப்ரல் மாதம் 2020-ல் அந்த இடத்தை காலி செய்ய உரிமையாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், லதா ரஜினிகாந்த் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், லதா ரஜினிகாந்துக்கு அவகாசம் அளித்தது.

இதனிடையே, ஆஷ்ரம் பள்ளியின் 2021 – 2022 கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு நடத்த தடை விதித்தும், ஏப்ரல் 30-ம் தேதிக்கு பின்னர் காலி செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் லதா ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், ஆஷ்ரம் பள்ளி விவகாரத்தில் கொரோனா காரணமாக ஏப்ரல் 2020-ம் ஆண்டு காலக்கெடுவுக்குள் வேறு இடத்திற்கு பள்ளியை மாற்ற முடியவில்லை என்றும், இது குறித்து நீதி மன்றத்தில் எடுத்துச் சொன்னதால், , 2021- வரை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது என்றும்; வாடகை பாக்கி உள்ளது என்ற தகவலில் அணு அளவும் உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே