சட்டமன்ற தேர்தலை காந்திய மக்கள் இயக்கம் முற்றாக புறக்கணிக்கிறது என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.

காந்திய மக்கள் இயக்கம் கட்சியின் தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊழல் மலிந்த இரண்டு திராவிட கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகத்தை முற்றாக விடுவிக்க வேண்டும் என்பதே காந்திய மக்கள் இயக்கத்தின் ஒற்றை நோக்கமாகும்.

கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக மதுவற்ற மாநிலம், ஊழலற்ற நிர்வாகம் என்ற இரண்டு இலட்சியப் பதாகைகளைச் சுமந்தபடி காந்திய மக்கள் இயக்கம் தன் பயணத்தைத் தொடர்கிறது.

உண்மை, நேர்மை, ஒழுக்கம், சமூக நலன் சார்ந்த சிந்தனை, தன்னல மறுப்பு ஆகியவையே மேலான அரசியல்வாதிகளின் பண்பு நலன்கள் ஆகும். 

ஆனால் நம்முடைய அரசியல்வாதிகளிடம் இவற்றை காண்பதற்கில்லை.

இழிந்த சாக்கடையாக மாறிவிட்ட அரசியலமைப்பை சீர்படுத்த வேண்டும் என்ற எண்ணமே பெரும்பாலான வாக்காளர்களிடம் இல்லை என்பதுதான் வருத்தத்திற்குரியது.

இந்தநிலையில் வரவிருக்கும் தேர்தலின் மூலம் எந்த அதிசயமும் அரங்கேறப் போவதில்லை ஆட்சி நாற்காலியில் அமரும் மனிதர்கள் ஒருவேளை மாறக்கூடும் ஆனால் நெறி சார்ந்த நல்லரசியல் வாய்ப்பதற்கு வழியில்லை.

எப்படியாவது ஒரு சந்தர்ப்பவாத அணியில் இடம் பெற்று இரண்டு மூன்று தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தித் தன் இருப்பை வெளிப் படுத்தும் அருவருப்பான அரசியலில் ஈடுபட காந்திய மக்கள் இயக்கம் விரும்பவில்லை களத்தில் நிற்கும் எந்தக் கட்சியின் மீதும் நம்பிக்கை இல்லாததால் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை காந்திய மக்கள் இயக்கம் முற்றாக புறக்கணிக்கிறது என தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே