சாம்பல் புதன் – தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு

கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் இன்று சாம்பல் புதனுடன் துவங்கியதையொட்டி தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகளும், நெற்றியில் திருநீறு இடும் நிகழ்ச்சிகளும் நடந்தது. 

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த காலத்தை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் தவக்காலமாக கடைபிடிக்கின்றனர்.

இயேசு சிலுவையில் உயிர் நீத்த நாள் புனித வெள்ளியாகவும், உயிர்த்தெழுந்த 3 ம் நாள் ஈஸ்டர் பண்டிகையாகவும் கொண்டாடப்படுகிறது.

தவக்காலத்தின் முதல் நாளான இன்று சாம்பல் புதனுடன் துவங்கியது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சாம்பல் புதனையொட்டி சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

பின்னர் கிறிஸ்தவர்களின் நெற்றியில் பேராலய அதிபர் பிரபாகர், சாம்பல் பூசி 40 நாள் தவக்காலத்தை தொடங்கி வைத்தார்.

இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று தவக்காலம் தொடங்கினார்கள்.

தூத்துக்குடி திரு இருதய ஆலயத்தில் சாம்பல் புதனையொட்டி மறைமாவட்ட ஆயர் ஸடீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு நெற்றியில் சாம்பலிட்டுக்கொண்டு தவக்காலம் தொடங்கினர்.

கோவில்பட்டியில் உள்ள தூய வளனார் தேவலாயத்தில் பங்கு தந்தை அலோசியஸ் துரைராஜ் திருபலி நடத்தி, சாம்பலால் சிலுவை அடையாளமிட்டு தவகாலத்தை துவக்கி வைத்தார்.

நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள பழமையான சவேரியார் தேவாலயத்தில் ஆயர் அந்தோணிசாமி தலைமையில் சாம்பல் புதன் திருப்பலி நடைபெற்றது.

பின்னர் கிறிஸ்தவர்களுக்கு சாம்பலால் சிலுவை வரைந்து தவக்காலத்திற்கு ஆயத்தப்படுத்தினார்.

இதில் திரளான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறில் உள்ள மறைமாவட்ட தலைமை பேராலயமான புனித சவேரியார் பேராலயத்தில், ஆயர் நசரேன் சூசை தலைமையில், சாம்பல் புதன் வழிபாடு மற்றும் திருப்பலி நடந்தது.

பின்னர் கிறிஸ்தவர்கள் நெற்றியில் சாம்பலால் சிலுவை அடையாளமிட்டு தவக்காலத்தை தொடங்கிவைத்தனர்.

இதில் ஏராளமானோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே