முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டு வரும் நிலையில் அவர் கிரிப்டோகரன்சியில் பல கோடி சொத்துக்களை குவித்து உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவர் கிரிப்டோகரன்சியில் பல கோடிகளை முதலீடு செய்துள்ளதாக எப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அலுவலங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தி வருகிறது. சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், செங்கல்பட்டு, ஆந்திரா, கர்நாடகா என 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டில் சிக்கும் 5வது மாஜி அதிமுக அமைச்சர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை
லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக 3 மணி நேரமாக இந்த ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டுமே 14 இடங்களுக்கு மேல் ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. மதுவிலக்கு, மின்சாரத்துறை இரண்டிலும் தங்கமணி அமைச்சராக இருந்தார். இந்த துறைகளில் முறைகேடு நடந்து இருப்பதாக ஏற்கனவே புகார்கள் அளிக்கப்பட்டு வந்த நிலையில்தான் இந்த ரெய்டு நடத்தப்பட்டு உள்ளது.
புகார்கள்
முன்னாள் அமைச்சர் தங்கமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது மகன் தரணீதரன் 2வது குற்றவாளியாகவும், மனைவி சாந்தி 3வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர். எப்ஐஆரில் இவர்களின் பெயர்களிலும் சொத்துக்கள் சேர்க்கப்பட்டு உள்ளது. ஆனால் இவர்களுக்கு வருமானம் வருவதற்கான வழிகள் இல்லாத நிலையிலும் கடந்த 5 வருடங்களில் சொத்துக்கள் சேர்ந்து இருக்கின்றன.
எப்ஐஆர்
இதையடுத்து அமைச்சகராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.85 கோடி சொத்து சேர்த்ததாக தங்கமணி, மனைவி சாந்தி, மகன் தரணிதரன் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலின் போது தங்கமணி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் இருக்கும் சொத்து விவரங்களை அடிப்படையில் இந்த ரெய்டு நடத்தப்பட்டது.
எப்படி வருமானம்?
இந்த எப்ஐஆரில் கூறப்பட்டு இருக்கும் தகவலின்படி, தங்கமணியின் இல்லத்தரசியாக இருக்கும் சாந்தி எப்படி வருமான வரி கட்டினார் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. சாந்தி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படும் முருகன் எர்த் மூவர்ஸ் நிறுவனம் செயல்பாட்டில் இல்லை. அப்படி இருக்கும் போது அவருக்கு எப்படி வருமானம் வந்து, அதற்கு வரியும் கட்டினார் என்று கேள்வி எழுப்பப்ட்டுள்ளது.
கிரிப்டோகரன்சி
அதேபோல் தங்கமணி பல கோடிகளுக்கு கிரிப்டோகரன்சி வாங்கி இருக்கிறார். தனது பணங்களை அப்படியே விலை உயர்ந்த கிரிப்டோகரன்சிகளை வாங்கி முதலீடு செய்துள்ளார். இதற்கான கணினி ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு இருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆவணங்கள்
கிரிப்டோகரன்சியில் இவர் முதலீடு செய்துள்ளதால் இந்த வழக்கு பெரிய அளவில் சிக்கலாகும் விஸ்வரூபம் எடுக்கும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. பொது நிதியை தவறாக பயன்படுத்தி இவர்கள் சொத்து குவித்ததாக புகாரில் கூறப்பட்டுள்ளது. 13(2) r/w 13(1)(e) of the Prevention of Corruption Act 1988 and uls 13(2) thw 13(1)(b) of the Prevention of Corruption Act 1968 as amendod in 2018 என்ற சட்ட பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.