டோக்கனில் குறிப்பிட்ட நாளில் வாங்காதவர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் தேதி அறிவிப்பு..!!

தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.2,500 பொங்கல் பரிசு வழங்குவதற்காக டோக்கன்கள் வழங்கும் பணி மாநிலம் முழுவதும் தொடங்கியது.

நியாயவிலைக் கடை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று பொங்கல் பரிசுத் தொகுப்புடன், ரூ.2,500 வழங்குவதற்கான டோக்கனை விநியோகித்து வருகிறார்கள்.

அவ்வாறு டோக்கனில் குறிப்பிட்ட நாளில் நியாய விலைக் கடைக்குச் சென்று வாங்க முடியாதவர்கள் அனைவருக்கும் ஜனவரி 13-ம் தேதி பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காலையில் 100 பேர், பிற்பகலில் 100 பேருக்கு பொங்கல் பரிசு வழங்கும் வகையில், டோக்கனில், அவர்கள் நியாயவிலைக் கடைக்கு வரும் நாள், நேரம் அனைத்தும் குறிப்பிடப்பட்டு வழங்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழா் குடும்பங்கள் உள்ளிட்டோருக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சா்க்கரை, 20 கிராம் உலா் திராட்சை 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், ஒரு முழுக் கரும்பு, துணிப்பை உள்ளிட்டவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பும் மற்றும் ரூ. 2,500 வழங்கப்படவுள்ளது.

இதற்காக டோக்கன் விநியோகிக்கும் பணி இன்று காலை தொடங்கி டிசம்பர் 30 வரை நடைபெறுகிறது. ரேஷன் கடை ஊழியா்கள் வீடு, வீடாக வந்து டோக்கன்களை வழங்கி வருகின்றனர்.

நாள் ஒன்றுக்கு 200 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் வழங்க அதாவது முற்பகல் 100 குடும்ப அட்டைகளும் பிற்பகல் 100 குடும்ப அட்டைகளுக்கும் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.

அதற்கான நாள், நேரம் போன்ற விவரங்களை டோக்கன்களில் குறிப்பிடப்படும்.

பொங்கல் பரிசு விநியோக பணி அந்தந்த ரேஷன் கடைகளில் ஜன.4 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறும். விடுபட்டோருக்கு ஜன.13 ஆம் தேதி வழங்கப்படும்.

பொங்கல் பரிசுத் தொகுப்பும் மற்றும் ரொக்கம் ஒரே நேரத்தில் நடைமுறையிலுள்ள அரிசி குடும்ப அட்டைதாரா்கள் அனைவருக்கும் வழங்கப்படும்.

குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினா் யாா் வந்தாலும் விநியோகிக்கப்படும்.

இடைவெளியுடன், முகக்கவசம் அணிந்து வரவேண்டும்.

இதுகுறித்த புகாா்கள் ஏதும் இருப்பின் அதை சம்பந்தப்பட்ட உணவுப்பொருள் வழங்கல் தனி வட்டாட்சியா்கள், வட்ட வழங்கல் அலுவலா்களின் தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே