‘அந்தகன்’ அப்டேட்: நாயகியாக ப்ரியா ஆனந்த் ஒப்பந்தம்

அந்தகன்’ படத்தின் நாயகியாக ப்ரியா ஆனந்த் ஒப்பந்தமாகி நடித்து வருவது உறுதியாகியுள்ளது.

இந்தியில் பெரும் வரவேற்பு பெற்ற ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ‘அந்தகன்’ என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தை பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கி வருகிறார். அவரது ஸ்டார் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

முன்னதாக, இந்தப் படத்தை மோகன் ராஜா, ஃப்ரெட்ரிக் ஆகியோர் இயக்குவதாக இருந்தது. இருவருமே விலகிக் கொள்ளவே தியாகராஜன் இயக்குநர் பொறுப்பை ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்து வருகிறார். அவருடன் சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிகுமார், மனோபாலா, வனிதா விஜயகுமார், செம்மலர், பூவையார் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். ஒளிப்பதிவாளராக ரவியாதவ், கலை இயக்குநராக செந்தில் ராகவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

பிரசாந்துக்கு நாயகியாக யார் நடிக்கவுள்ளார்கள் என்பது குறித்துப் பல்வேறு தகவல்கள் வெளியாகின. இறுதியாக ப்ரியா ஆனந்த் ஒப்பந்தமாகி நடித்து வருவது உறுதியாகிறது. இது தொடர்பான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே