சென்னையில் இருந்து ஐதராபாத்திற்கு கொண்டு செல்லப்படும் அம்மோனியம் நைட்ரேட்.. அதிகாரிகள் ஆய்வு!!

சென்னை மணலி சேமிப்பு கிடங்கில் 37 கண்டெய்னர்களில் வைக்கப்பட்டுள்ள அம்மோனியம் நைட்ரேட் விவகாரத்தில் முதற்கட்டமாக 10 கண்டெய்னர்கள் ஹைதராபாத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ள நிலையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

சேமிப்பு கிடங்கில் சுங்கத்துறை, வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். சென்னை மணலியில் உள்ள சரக்குப் பெட்டக மையத்தில் 740 டன் அம்மோனியம் நைட்ரேட் கடந்த 2015 செப்டம்பர் 27-ஆம் தேதியில் இருந்து 5 ஆண்டுகளாக வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பெய்ரூட்டில் நடந்த விபத்தை அடுத்து, மணலியில் உள்ள அம்மோனியம் நைட்ரேட்டை அப்புறப்படுத்த மக்களிடையே கோரிக்கை எழுந்தது. அரசியல் தலைவர்களும் இதுகுறித்து வலியுறுத்தி இருந்தனர். இந்நிலையில், சுங்கத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் மணலியில் அம்மோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருக்கும் இடத்தினை ஆய்வு செய்தனர்.

மேலும், அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது என்றும் அடுத்த 3 நாள்களில் இதனை ஏலம் விட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுங்கத் துறை உறுதியளித்தது. அதன்படி, நேற்று இதற்கான ஏலம் விடப்பட்ட நிலையில், ஹைதராபாத் நிறுவனம் ஒன்று 10 கன்டெய்னர்களை ஏலத்தில் எடுத்துள்ளது.

இதையடுத்து, மொத்தமுள்ள 37 கண்டெய்னர்களில் 10 கண்டெய்னர்கள் நாளை ஹைதராபாத் எடுத்துச் செல்லப்படுகிறது. இதனை பாதுகாப்பாக எடுத்துச் செல்வதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அதிகாரிகள் தற்போது மீண்டும் ஆய்வு நடத்தி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே