கோவிட்-லிருந்து குணமடைந்த 38 போலீசார் பிளாஸ்மா தானம்!!

கரோனா நோய்த்தொற்றுப் பணியில் முன்களப் பணியாளர்களாகப் பணியாற்றிய சென்னை காவல்துறையினர் ஆயிரக்கணக்கானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் உடல்நலன் தேறிய காவலர்கள் பிளாஸ்மா தானம் அளிக்க முன்வந்துள்ளனர். முதற்கட்டமாக 38 பேர் தானம் அளித்தனர்.

இதுகுறித்து சென்னை காவல்துறை இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

‘கரோனாவுக்கு எதிரான போரில் பிற அரசுத் துறைகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உறுதுணையுடன் தமிழக காவல்துறை களத்தில் முன்னணியில் செயல்பட்டு வருகிறது.

சென்னை மாநகரத்தில், சென்னை பெருநகர காவல்துறையினர் கட்டுப்பாட்டு பகுதி மேலாண்மை, தனிமைப்படுத்துதல் மேலாண்மை, தொடர்புத் தடமறிதல், சமூக இடைவெளி விதிமுறைகளை அமல்படுத்துதல் மற்றும் சந்தை இடங்களில் கூட்டமாக மக்கள் கூடுவதை ஒழுங்குபடுத்துதல் போன்ற கடமைகளைச் செவ்வனே செய்து வருகிறார்கள்.

இக்கடமைகளை நிறைவேற்றும்போது ஏராளமான பொதுமக்களுடன் தொடர்பு கொள்கின்ற ஒரு நிலையும் உள்ளது.

தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையிலும், 1,920 காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் கரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டனர்.

1,549 காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் இத்தொற்று நோயிலிருந்து சிகிச்சை பெற்று குணமாகி மீண்டும் கடமையாற்றும் வகையில் பணிக்குச் சேர்ந்துள்ளனர்.

மேற்குறிப்பிட்ட காவல்துறை அதிகாரிகளும் ஆளினர்களும் தங்கள் கடமைகளை முன்பிருந்த அதே அர்ப்பணிப்புடனும், ஆர்வத்துடனும் செய்து வருகிறார்கள்.

கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சையளிக்க உதவும் வகையில் பிளாஸ்மாவைச் சேகரிக்க தமிழக அரசு பிளாஸ்மா வங்கி ஒன்றை நிறுவியுள்ளது, தமிழக முதல்வரும் கரோனா தொற்றுக்குச் சிகிச்சையளிக்க பிளாஸ்மா வழங்க முன்வருமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

தமிழக முதல்வரின் அவ்வேண்டுகோளுக்கிணங்க கரோனாவிலிருந்து குணமடைந்த 48 காவல்துறைப் பணியாளர்கள் தங்கள் பிளாஸ்மாவைத் தானம் செய்ய முன்வந்தனர்.

மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர், 38 காவல்துறைப் பணியாளர்கள் இன்று (13.8.2020) பிளாஸ்மா தானம் செய்யத் தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டனர்.

சென்னை பெருநகர காவல்துறையின் ஆயுதப் படையைச் சேர்ந்த 38 காவல் துறையினர் உள்ளிட்ட 40 காவல் பணியாளர்கள் (2 பெண் காவல் துறையினர் உட்பட) சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் ஆகியோர் முன்னிலையில் பிளாஸ்மா தானம் செய்தனர்.

கரோனாவுக்கு எதிரான போர்க்களத்தின் முன்னணியில் கடமையைச் செவ்வனே செய்துவரும் நிலையில், கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோருக்கு பிளாஸ்மா சிகிச்சையளிக்கும் பொருட்டு பிளாஸ்மா வழங்க தாங்களாகவே முன்வந்த காவல் துறையினரின் மனப்பாங்கினை தமிழக முதல்வர் பாராட்டியுள்ளார்’.

இவ்வாறு சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே