கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த அ.ம.மு.க பொருளாளர் வெற்றிவேல் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது மறைவிற்கு பல தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அமுமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளரும், எனது இனிய நண்பருமான திரு.P வெற்றிவேல் முன்னாள் எம்எல்ஏ அவர்கள் மறைந்தார் என்ற செய்தியை நம்ப முடியாமல் தவிக்கிறேன்.

மிகுந்த வேதனையும் சொல்ல முடியாத துயரமும் என் தொண்டையை அடைக்கிறது. புரட்சித்தலைவி அம்மா மற்றும் தியாகத் தலைவி சின்னம்மா அவர்களின் பேரன்பை பெற்றவர்.

என் மீது அளவிட முடியாத பாசம் கொண்டவர். எதையும் உரிமையோடு பளிச்சென பேசுபவர். ‘என்ன நடந்தாலும் நான் தியாகத்தின் பக்கம், உண்மையின் பக்கமே நிற்பேன்’ என்று உறுதிபட சொல்லி இறுதிவரை கழகத்தின் மீது அளப்பரிய அன்பு கொண்டிருந்தவர்.

துரோகத்திற்கு எதிராக நாம் நடத்தி வருகிற புனிதப் போரில் ஒரு தளபதியாக நம்மோடு களத்தில் நின்றவர். ‘வெற்றி…வெற்றி’ என வாய் நிறைய அழைத்து இனி யாரிடம் பேசப்போகிறோம் என்று நினைக்கிற போது எதற்காகவும் கலங்காதே என் உள்ளம் கலங்கி தவிக்கிறது.

திரு வெற்றிவேல் அவர்களின் மறைவு கழகத்திற்கும், தனிப்பட்ட முறையில் எனக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.

அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும் ஆறுதல் சொல்ல வார்த்தையின்றி தவிக்கிறேன்.

நம்முடைய லட்சிய பயணத்தில் வெற்றிவேல் என்கிற பெயர் எப்போதும் நிலைத்திருக்கும் அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற வேண்டுகிறேன் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே