அம்மா நகரும் ரேஷன் கடைகள்.. தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி..!!

வீடுகளுக்கே சென்று பொருட்கள் விநியோகம் செய்யும் வகையில் தமிழகத்தில் 3,501 அம்மா நகரும் ரேஷன் கடைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில், கூட்டுறவுத்துறை சார்பில் 33 ஆயிரம் ரேஷன் கடைகள் நடத்தப்படுகிறது.

இந்த கடைகள் மூலம் கார்டுதாரர்கள், தங்கள் முகவரிக்கு உட்பட்டு ஒதுக்கியுள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று, அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டும்.

ஆனால், காடு, மலைப் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு, போதிய சாலை வசதி இல்லாததால், அங்கு வசிப்போர், ரேஷன் கடைகளுக்கு செல்ல சிரமப்பட்டனர்.

எனவே, நகரும் ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது.

இதையேற்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், குடியிருப்புகளுக்கு அருகிலேயே அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்கும் பொருட்டு, மாநிலம் முழுவதும் ₹9.66 கோடியில் 3,501 அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் தொடங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதன்படி, சென்னையில் 400 , நாகை 262, கிருஷ்ணகிரி 168, திருவண்ணாமலை 212 கடைகள் உட்பட 3,501 அம்மா நகரும் ரேஷன் கடைகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அம்மா நகரும் நியாயவிலைக் கடைகள் மூலம் தமிழ்நாடு முழுவதும் 5,36,437 குடும்ப அட்டை தாரர்கள் பயனடைவர்.

மேலும் குழந்தைகள், பெண்கள், முதியோர்களின் ஆரோக்கியத்தை வலுப்படுத்தும் வகையில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம் திருச்சியில் உள்ள நியாயவிலைக்கடைகளில் திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார்.

மின்சாரம் மற்றும் சூரிய மின்சக்தியை இயங்கும் 13 புதிய வடிவிலான ஆட்டோக்களையும் முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே