‘இந்த நேரத்தில் மட்டுமே மெட்ரோ ரயில் இயங்கும்’.. மெட்ரோவுக்கு நேரக் கட்டுப்பாடு!

செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கவுள்ள நிலையில் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் 4 ஆம் கட்ட பொதுமுடக்க தளர்வுகளில் செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், ‘கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடப்பட்டிருக்கும். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பயணிகள் கடைப்பிடிக்க வேண்டும்.

மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு முகக் கவசம் விற்பனை செய்யப்படும்’ என மெட்ரோ ரயில் பயண வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் சென்னையில் மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மெட்ரோ ரயில் சேவை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இருக்கும்.

இதில் ‘பீக் ஹவர்ஸ்’ எனும் காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், மாலை 5 முதல் 8 மணி வரையிலும், 5 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயிலும், மற்ற நேரங்களில் 10 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயிலும் இயங்கும்.

நிறுத்தங்களில் 20 வினாடிகளுக்குப் பதிலாக 50 வினாடிகள் ரயில் நின்று செல்லும்.

விமான நிலையம் – வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை செப்டம்பர் 7 ஆம் தேதியும்; செயின்ட் தாமஸ் மவுண்ட் – சென்ட்ரல் இடையே ரயில் சேவை செப்டம்பர் 9 ஆம் தேதியும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே