ஆம்பூர் அருகே இன்று அதிகாலை சிக்னல் கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே தொழிலாளர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகேயுள்ள கன்னிகாபுரம் பகுதியில் இன்று அதிகாலை ரயில்வே சிக்னல் கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து, புதூர்நாடு பகுதியை சேர்ந்த சீனியர் டெக்னீசியன் முருகேசன், பீகாரை சேர்ந்த டெனீசியன் பிரவேஷ் குமார் உள்ளிட்டோர் அந்த பகுதியில் கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில், அதிகாலை ஜோலார்பேட்டையில் இருந்து ஆந்திர மாநிலம் ரேணிகுண்ர்டா நோக்கி சென்ற சரக்கு ரயில், எதிர்பாராத விதமாக பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது மோதியது.
இதில் முருகேசன், பிரவேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், விரைந்து சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயில் மோதி 2 ரயில்வே ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் ஆம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.