ஏப்ரல் 15 ஆம் தேதி திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம்

கரோனா விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளின் அணுகுமுறை சம்பந்தமாக ஆலோசிக்க திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடக்க உள்ளதாக திமுக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கும் முதல்வர் பழனிசாமிக்கும் அறிக்கைப் போர் நடந்து வருகிறது.

இந்நிலையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏப்.15 அன்று கூட்டுவதாக திமுக அறிவித்துள்ளது.

இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், ‘கரோனா நோய்த் தொற்றில் மத்திய- மாநில அரசுகளின் அணுகுமுறை குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஏப்.15 (புதன்கிழமை) அன்று காலை 10 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக தமிழக அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை 1,075 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் ரேபிட் டெஸ்ட் நடத்தி கரோனா தொற்று நோயாளிகளை இனங்காண வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

ஆனால், ரேபிட் டெஸ்ட் கிட் வாங்க தமிழகம் நேரடியாக கொள்முதல் செய்ய முயல அதற்கு மத்திய அரசு தடை விதித்து, மத்திய அரசின் மூலமாகத்தான் கொள்முதல் நடக்கும் எனத் தெரிவித்ததாக வந்த தகவலை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

மறுபுறம் தமிழக அரசு கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக தமிழக அரசு கேட்ட 11,000 கோடி ரூபாயில் வெறும் 500 கோடி ரூபாய் மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

ஆனால் தமிழகம் இதுவரை தனது சொந்த நிதியாக ரூ.3000 கோடி வரை செலவு செய்துள்ளது. மத்திய அரசிடம் தமிழகத்துக்கான நிதியைக் கேட்டுப் பெற மாநில அரசுக்குத் துணிவில்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்நிலையில் மாநில அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை முதல்வர் நிராகரித்து வருகிறார்.

கடந்த இரண்டு நாட்களாக முதல்வருக்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் அறிக்கை போர் நடக்கிறது.

இன்று தமிழக அரசு தன்னிச்சையாக தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சியினர் பொதுமக்களுக்கு நிவாரணத்தை நேரடியாக வழங்கக்கூடாது.

மீறி வழங்கினால் சட்ட நடவடிக்கை என அறிவித்துள்ளது.

இதை திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் மேற்கண்ட நிலைகள் குறித்து ஆராயவும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை திமுக கூட்ட உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே