பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்

கரோனா தொற்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் வீடு திரும்பினார்.

இரு வாரங்களுக்கு முன் கரோனா தொற்றால் போரிஸ் ஜான்சன் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. கரோனா பாதித்த முதல் உலகத் தலைவர் ஜான்சன்தான்.

வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு செயல்பட்டுவந்த போரிஸ், ஒருகட்டத்தில் உடல்நிலை மோசமாகவே லண்டனிலுள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பின்னர், சுவாசப் பிரச்சினை ஏற்படவே தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றிக் கண்காணிக்கப்பட்டார்.

மீண்டும் சில நாள்கள் முன் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட போரிஸ் ஜான்சன், இன்று வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

வீட்டிலும் மருத்துவக் கண்காணிப்பிலும் இருக்கும் அவர், உடனடியாக அலுவல்கள் எதையும் தொடங்கப் போவதில்லை என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கரோனாவுக்காகத் தமக்கு சிகிச்சையளித்த தேசிய சுகாதார சேவைப் பணியாளர்களுக்குத் தாம் நன்றிக்கடன்பட்டிருப்பதாகப் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

தேசிய சுகாதார சேவைப் பணியாளர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதுமானதல்ல என்று போரிஸின் வருங்கால மனைவியான கேரி சைமன்ட்ஸ் சுட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே