இந்திய-சீன எல்லை விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளும் மத்திய அரசுக்கு ஆதரவு!

நாட்டின் எல்லைக்குள் சீன இராணுவம் ஊடுருவவில்லை எனவும் இந்தியாவிற்குள் ஊடுருவ முயற்சித்தவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய – சீன எல்லையில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை கட்சித் தலைவர்களுடன் காணொளி தொடர்பாடல் மூலம் பிரதமர் கலந்துரையாடினார். இதன்போது பிரதமர் மோடிக்கு அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் மோடிக்கு ஆதரவு தெரிவித்தனர். கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை இந்திய இராணுவத்துக்கும் சீன இராணுவத்துக்கும் இடையில் ஏற்பட்ட கடுமையான மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் மரணமடைந்தனர். 50இற்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர்.

அதேபோல், சீனா தரப்பிலும் 35இற்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வந்தாலும் சீனா அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. கடந்த 50 ஆண்டுகளில் இரு நாடுகளின் இராணுவத்துக்கு இடையே நடந்த மிகப்பெரிய தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது. இந்நிலையில்தான் இவ்விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. உட்பட 20இற்கும் மேற்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். அதேசமயம் ஆம் ஆத்மி, ராஷ்ட்ரீய ஜனதாதளம் உட்பட நாடாளுமன்றத்தில் போதிய பிரதிநிதித்துவம் இல்லாத கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. மேலும், மத்திய அமைச்சர்கள், ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சீனாவில் நடந்த விவகாரம் தொடர்பாகவும் இந்தியத் தரப்பில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் பிரதமர் மோடி விளக்கமளித்தார். இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து கட்சிகளும் எல்லைப் பிரச்சினை தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதன்போது, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி பேசுகையில், இந்தக் கூட்டம் என்னுடைய பார்வையில் மே 5ஆம் திகதி சீன இராணுவம் லடாக் எல்லையில் பல இடங்களில் ஊடுருவி இந்திய எல்லைக்குள் வந்துள்ளது என்பதை அறிந்தவுடன் கூட்டப்பட்டிருக்க வேண்டும். எப்போதுமே, ஒட்டுமொத்த தேசமும் ஒரு பாறை போல் ஒன்றாக நின்று நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டைக் காக்கத் தேவையான நடவடிக்கைகளில் மத்திய அரசை முழுமையாக ஆதரித்திருக்கும்.

கடைசிக் கட்டத்தில் கூட நெருக்கடியின் பல முக்கியமான அம்சங்களில் நாம் இன்னும் இருட்டில்தான் இருக்கிறோம். எங்கள் கட்சி மற்றும் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகள் நாட்டின் பாதுக்காப்புப் படைக்குப் பின்னால் ஒற்றுமையாக நிற்போம்” என்றார். திரிணாமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா கூறுகையில், “நாம் சீனாவுக்கு முன்பு தலை வணங்கிவிடக் கூடாது. சீனா ஜனநாயக நாடு அல்ல. அது சர்வாதிகாரி நாடு. அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதைச் செய்வார்கள். நாம் ஒற்றுமையாக கைக்கோர்த்து நிற்க வேண்டும். இந்தியா வெல்லும்” என்றார்.

சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே பேசுகையில், “நாம் அனைவரும் ஒன்று. நாங்கள் உங்களோடு (பிரதமர்) இருக்கிறோம். எங்களுடன் பேசியதற்காக உங்களைப் பாராட்ட விரும்புகிறேன். இந்தியா வலிமையாக உள்ளது” என்றார்.

இதையடுத்து பிரதமர் மோடி உரையாற்றுகையில், “சீனா நமது எல்லைக்குள் ஊடுருவவில்லை. நமது நிலையையும் கைப்பற்றவில்லை. நாட்டின் ஒரு அங்குல நிலத்தின் மீது யாரும் கண் வைக்க முடியாத அளவிற்கு நமது படை பலம் உள்ளது. நமது நாட்டைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை நமது ஆயுதப்படை மேற்கொள்ளும். ஒரே சமயத்தில் பல முனைகளுக்கும் செல்லக்கூடிய திறன் நாட்டின் ஆயுதப் படைகளுக்கு உள்ளது.

கடந்த சில ஆண்டுகளில், எல்லைகளைப் பாதுகாக்க, உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம். அதேபோன்று நமது ஆயுதப் படைகளின் தேவைகள், விமானங்கள், ஹெலிகொப்டர்கள், ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்புக்கள் என எதுவாக இருந்தாலும் அதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

நமது தேசத்தைப் பாதுகாக்க நமது படைகள் எந்த முயற்சியையும் விடாது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். நமது படைகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்திருந்த போதிலும், இராஜதந்திர ரீதியிலும் சீனாவிற்கு எங்கள் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளோம். இந்தியா அமைதியையும் நட்பையும் விரும்புகிறது. ஆனால் இறையாண்மையைப் பாதுகாப்பது மிக உயர்ந்தது” என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே