சென்னையில் காற்று மாசு படிப்படியாக குறைந்தது

சென்னையில் சில இடங்களில் காற்று மாசு காரணமாக கடந்த சில தினங்களாக பனிப்படர்ந்த புகை போன்ற காட்சிகள் பகல் நேரங்களிலும் தென்பட்டுவந்தது. இந்நிலையில் இன்று சென்னையில் காற்று மாசு குறைந்து, காற்றின் தரம் கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது.

சென்னையில் நிலவும் வெப்பமான தட்பவெப்பநிலையால், வீசும் காற்றில் ஈரப்பதம் குறைந்து, காற்றில் மாசு குறைந்திருக்கிறது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் காற்று வீசும் திசை மற்றும் காற்றின் வேகம் சாதகமாக இருப்பதினால், சென்னையில் படிப்படியாக காற்று மாசு குறைந்து காற்றின் தரம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் காற்றின் தரம் சென்னையில் சராசரியாக 184ஆக பதிவாகி இருந்தது.

இந்த சூழலில் சென்னை மணலியில் காற்றின் தரக் குறியீடு 89ஆகவும், வேளச்சேரியில் 62ஆகவும், ஆலந்தூர் பகுதியில் 84 என்ற அளவில் காற்றின் தரக் குறியீடு பதிவாகியிருக்கிறது.

இதன்மூலம் சென்னையில் இன்று காலை முதல் காற்றின் தரம் உயர்ந்து, ஒட்டுமொத்த சராசரியாக 78ஆக பதிவாகியிருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வானிலை ஆய்வாளர் ஸ்ரீகாந்த் தெரிவித்திருக்கிறார்.

மத்திய மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்தால் ரியல் டைம் மானிட்டரிங் என்னும் முறையில் சென்னையில் மூன்று இடங்களில் காற்றின் தரம் அளவிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே