“மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு ஒருபோதும் உதவாது. மாறாக அவர்களை அழித்துவிடும். இந்தச் சட்டங்களை திரும்பப் பெறவைக்காமல் நாங்கள் ஓயமாட்டோம்” என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை ரத்து செய்யக்கோரியும் டெல்லியின் பல எல்லைகளில் விவசாயிகள் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

இதற்காக நாடுமுழுவதும் 2 கோடி விவசாயிகளிடம் இந்த சட்டத்துக்கு எதிராகப் பெறப்பட்ட கையொப்பத்தை கடந்த மாதம் குடியுரசுத் தலைவரிடம் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் நிர்வாகிகள் வழங்கினர்.

மேலும், காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாகவும், அவர்களுடான ஒற்றுமையை வெளிப்படுத்தும் நோக்கிலும் நாடு முழுவதும் இன்று ஆளுநர் மாளிகையை நோக்கி முற்றுகைப் போராட்டத்தை காங்கிரஸ் கட்சியினர் நடத்துகின்றனர்.

டெல்லியில் துணை நிலை ஆளுநர் அனில் பைஜாலின் அதிகாரபூர்வ மாளிகை நோக்கி இன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைைமயில், பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பேரணி சென்றனர்.

அப்போது டெல்லியில் உள்ள துணை நிலை ஆளுநரின் மாளிகைக்கு வெளியே ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தொண்டர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு உதவாது. மாறாக அவர்களை அழித்துவிடும்.

அம்பானி, அதானி ஆகியோருக்கு உதவுவதற்காத்தான் இந்தச் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதனால்தான் காங்கிரஸ் கட்சி விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்கிறது.

இந்த வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெறும்வரை காங்கிரஸ் கட்சி பின்வாங்காது. நிலம் அபகரிப்புச் சட்டம் முன்பு வந்தபோது, விவசாயிகளின் நிலத்தை எடுத்துக் கொள்ள முன்பு, மோடி அரசு முயன்றது.

ஆனால், அதையும் அந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சிதான் தடுத்தது.

இப்போது பாஜகவும், அவர்களின் சில நண்பர்களும் சேர்ந்து மீண்டும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்த இந்த வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்துள்ளார்கள்’ எனத் தெரிவித்தார்.

முன்னதாக ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் ‘ தங்களின் உரிமைகளை வெல்வதற்காக அகங்காரம் பிடித்த மோடி அரசுக்கு எதிராக சத்யாகிரஹ போராட்டத்தை விவசாயிகள் நடத்தி வருகிறார்கள்.

விவசாயிகளுக்கு எதிராக நடந்துவரும் அட்டூழியத்துக்கும், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும் எதிராக ஒட்டுமொத்த தேசமே குரல் கொடுத்து வருகிறது.

நீங்களும் இந்த சத்யாகிரஹப் போராட்டத்தில் ஒருபகுதியாக பங்கேற்க வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே