நடிகர் ரஜினிகாந்த்திற்கு நடிகை குஷ்பு ஆதரவு

பெரியார் குறித்த சர்ச்சைப் பேச்சுக்கு மன்னிப்புக் கேட்க முடியாது என்று ரஜினிகாந்த் கூறியதற்கு நடிகை குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளார்.

துக்ளக் வார இதழின் 50-வது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971-ம் ஆண்டு பெரியார் சேலத்தில் நடத்திய மாநாட்டில் இந்துக்களின் கடவுளான ராமர் மற்றும் சீதை படங்களை செருப்பால் அடித்தார்.

அதுதொடர்பாக செய்தி வெளியிட்ட துக்ளக் இதழுக்கு அப்போதைய கருணாநிதி அரசு தடைவிதித்தது என்று பேசியிருந்தார்.

அந்த மாநாட்டில் ராமர் படத்தை செருப்பால் அடிக்கவே இல்லை என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்டோர் உண்மை நிலையை விளக்கினர்.

இதையடுத்து ரஜினிகாந்த் பெரியாரை தவறாக பேசியதற்காக அவர் மீது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் புகாரளிக்கப்பட்டன.

மேலும் ரஜினிகாந்த் இந்த விவகாரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கோரிக்கை வைத்து போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், பெரியார் பற்றி நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்ட முடியாது என்று விளக்கம் அளித்தார்.

மேலும் இல்லாத விசயத்தை நான் கூறவில்லை, கற்பனையாகவும் எதையும் கூறவில்லை, மற்றவர்கள் கூறியது பத்திரிகையில் வந்ததையும் தான் நான் கூறியுள்ளேன் என்று ரஜினி தெரிவித்தார்.

ரஜினிகாந்தின் இக்கருத்துக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் நடிகை குஷ்பு, ரஜினி கூறுவது சரியோ தவறோ ஆனால் அவர் எடுத்த நிலைப்பாட்டில் பயமில்லாமல் உறுதியாக இருக்கிறார். அதற்கு எனது பாராட்டுகள். அவர் சொல்வது சரி, தவறு என்று கூற நான் நீதிபதி அல்ல. மிக முக்கியமானது பயமில்லாமல் தனது கருத்தை தெரிவிப்பதுதான். அதை ரஜினிகாந்த் செய்திருக்கிறார் என்று கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே