தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலில் ஆகம விதிகளின்படி குடமுழுக்கு நடத்தப்படும்!

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு ஆகம விதிகளின்படியே நடத்தப்படும் என, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் குடமுழுக்கு அடுத்த மாதம் 5 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், குடமுழுக்கினை தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் என்று திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிளும், பல்வேறு தமிழ் அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.

இதனிடையே, பிரகதீஸ்வரர் கோயில் குடமுழுக்கை தமிழ் முறைப்படி நடத்த உத்தரவிடக் கோரி, ராமநாதபுரத்தைச் சேர்ந்த திருமுருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு, ஆகம விதிகளின்படியே நடத்தப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலய நிர்வாகத்தினரை எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை வரும் 27 ஆம் தேதிக்கும் ஒத்திவைத்தனர்.

இதனிடையே, தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில், தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்குக்கான உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலாளர் தலைமையிலான 21 பேர் கொண்ட இக்குழுவினர், குடமுழுக்கு விழாவுக்கான ஏற்பாடுகளை கண்காணிப்பார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இக்குழுவில் நிதித்துறை, நகராட்சி நிர்வாகம், சுற்றுலாத்துறை ஆகியவற்றின் செயலாளர்கள் இடம்பெற்றுள்ளனர். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே