கிழக்கு லடாக்கில் ஆக்கிரமிப்பு மனப்பான்மையுடன், சீனா செயல்பட்டு வருகிறது என டில்லியில் அமெரிக்கா வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சீனா, எல்லை பிரச்னையில் 3வது நாடு தலையிட தேவையில்லை என தெரிவித்துள்ளது.

இந்தியா, அமெரிக்காவின் வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்கள் இடையேயான மூன்றாவது மாநாடு, டில்லியில் நேற்று (அக்.,27) நடந்தது.

இதில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, ராணுவ அமைச்சர் மார்க் எஸ்பர், இந்திய தரப்பில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றனர். பின்னர் அமெரிக்க அமைச்சர்கள் கூறுகையில், கிழக்கு லடாக் உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்பு மனப்பான்மையுடன், சீனா செயல்பட்டு வருகிறது.

இந்தோ – பசிபிக் பிராந்தியம் அனைவருக்கும் சொந்தமானது; இதை உறுதி செய்வதற்கு, இந்தியாவுடன் தோளோடு தோள் நிற்போம். ராணுவத் துறையில், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு, தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது.

இந்தியாவின் அண்டை நாடுகளில் உள்ள நிலவரம் குறித்தும் பேச்சு நடத்தினோம்.

எல்லை கடந்த பயங்கரவாதத்தை ஏற்க முடியாது’ என தெரிவித்தனர்.

இது தொடர்பாக டில்லியில் உள்ள சீன தூதரகம் வெளியிட்ட அறிக்கை: இந்தியா – சீனா இடையிலான எல்லை பிரச்னை என்பது இரு நாட்டு விவகாரம். எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்கவும், படைகளை திரும்ப பெற்று கொள்வது குறித்தும் இரு நாடுகளும் தூதரகம் மற்றும் ராணுவ ரீதியில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

இரு நாடுகளுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடை, தீர்த்து கொள்வதற்கான திறன், அறிவு மற்றும் ஆற்றல் இந்தியா, சீனாவுக்கு உள்ளது. இதில் 3வது நாடு தலையிட வேண்டாம்.

அமெரிக்கா முன்மொழிந்துள்ள இந்தோ – பசுபிக் நிலைப்பாடு என்பது, பல்வேறு குழுக்கள் இடையே மோதலையும், புவியியல் ரீதியாக மோதலையும் தூண்டிவிடும். அதன் மூலம், அந்த பகுதியில் ஆதிக்கத்தை நிலைநிறுத்த அமெரிக்கா திட்டமிடுகிறது. கொரோனா விவகாரத்தில், எங்கள் மீது வீண்பழி சுமத்த அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது.

அதனை விடுத்து, தங்கள் நாட்டு மக்களை காக்கும் பணியில் அமெரிக்க அரசியல்வாதிகள் செய்ய வேண்டும்.

சீனா குறித்து தவறான தகவலை பரப்புவதையும் அமெரிக்கா நிறுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே