கொரோனோவால் சிகிச்சையில் இருந்த தங்கள் பெற்றோரை அவர்களது குழந்தைகள் 15 நாட்களுக்கு பிறகு பார்த்து, அவர்களை கட்டி அணைத்து தங்கள் பாசத்தை வெளிப்படுத்திய சம்பவம் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.
கேரளாவை சேர்ந்த கணவன் மனைவி இருவரும் சென்னையில் பணிபுரிந்துவந்த நிலையில் கொரோனா காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், குழந்தைகளை பார்த்துக்கொள்ள உறவினர்கள் நண்பர்கள் யாரும் இல்லை.
இதனை அடுத்து மருத்துவமனையின் தனியறையில் வைத்து மருத்துவர்களும் செவிலியர்களும் அந்த இரண்டு குழந்தைகளையும் அன்பாக கவனித்துக் கொண்டனர்.
தற்போது குழந்தைகளின் பெற்றோர் இருவரும் கொரோனோவில் இருந்து குணமடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.
குழந்தைகளுக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பதால் அவர்களை வீட்டிற்கு அனுப்புவதற்கு முன் மருத்துவமனை வளாகத்தில் பெற்றோர் மற்றும் குழந்தைகள் சந்தித்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
15 நாட்களா தங்களது அன்பு குழந்தைகளை பார்க்காத பெற்றோர், 15 நாட்களாக தங்களை ஊட்டி வளர்த்த பெற்றோரை பார்க்காத குழந்தைகள், இவர்கள் அனைவரும் சந்தித்துக்கொண்டு தங்கள் அன்பை வெளிப்படுத்திய காட்சி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.