டெல்லி அசோக்நகர் பள்ளிவாசலுக்கு தீ வைப்பு…

டெல்லியில் அசோக் நகர் பகுதியில் இருக்கும் பாதீ மசூதிக்கு கலவரக்காரர்கள் தீ வைத்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டெல்லியில் நடக்கும் கலவரம் இப்போதைக்கு முடிவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.

அங்கு பாதுகாப்பிற்காக தற்போது சிஆர்பிஎப் களமிறக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இத்தனை நாட்கள் அமைதியாக நடந்து வந்த சிஏஏ போராட்டம் பெரிய கலவரத்தில் முடிந்துள்ளது.

இதுவரை இந்த கலவரத்தில் மொத்தம் 18 பேர் கொல்லப்பட்டனர். இதில் 15 பேர் இஸ்லாமியர்கள். இதில் போலீஸ் கான்டஸ்டிபிள் ஒருவரும் கொல்லப்பட்டார். போலீஸ் துணை கமிஷ்னர் ஒருவர் படுகாயம் அடைந்தனர்.

இந்த நிலையில் டெல்லியில் மசூதி ஒன்று எரிக்கப்பட்ட வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

பிரபல பத்திரிக்கையாளர் ராணா அயூப்தான் இந்த வீடியோவை முதலில் வெளியிட்டது.

அசோக் நகரில் உள்ள பாதீ மசூதி எரிக்கப்பட்டுள்ளது என்று செய்தி வெளியிட்டார்.

அதன்பின் அந்த வீடியோவை அவர் நீக்கினார். பின் அந்த செய்தியை உறுதிப்படுத்திவிட்டு அந்த வீடியோவை மீண்டும் வெளியிட்டார்.

ஆனால் டெல்லி போலீஸ் இந்த சம்பவத்தை மறுத்தது. டெல்லியில் அப்படி எதுவும் நடக்கவில்லை. யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கூறியது. ஏஎன்ஐ நிறுவனமும் இதே செய்தியை வெளியிட்டது .

இதையடுத்து பல்வேறு வலதுசாரி அமைப்புகள், இதேபோல் இந்த வீடியோ பொய் பழைய வீடியோ என்று கூறியது.

கடைசியில் இந்த வீடியோ டெல்லியில் எடுக்கப்பட்டது, இது புதிய உண்மையான வீடியோதான் என்று உறுதி செய்யப்பட்டது.

அதன்படி அசோக் நகரில் உள்ள பாதீ என்ற மசூதிதான் இப்படி எரிக்கப்பட்டுள்ளது. அந்த மசூதிக்குள் நுழைந்த கும்பல் மேலே இருக்கும் பச்சை வண்ண இசுலாமிய கொடியை கீழே இறக்கி கிழித்து இருக்கிறார்கள்.

அதன்பின் அதே இடத்தில காவி நிற அனுமார் கொடியை ஏற்றி உள்ளனர். இந்த சம்பவம் அப்படியே வீடியோவாக வெளியாகி உள்ளது.

கலவரம் செய்த நபர் ஒருவர் கொடியை மாற்றுவது வைரலாகி உள்ளது.

அதோடு கடைசியில் மசூதிக்கு தீ வைத்தும் இருக்கிறார்கள். ஜெய் ஸ்ரீராம் கோஷத்தோடு அவர்கள் மசூதியை எரித்து உள்ளனர். மசூதியின் உட்பக்கம் கொழுந்துவிட்டு எரியும் வீடியோக்கள் வெளியாகி உள்ளது.

அங்கு தீயணைப்பு படையினரும் உள்ளே வந்து தீயை அனைத்து உள்ளனர். அதேபோல் போலீஸ் சிலரும் உள்ளே இருந்துள்ளனர்.

போலீஸ் இதை நேரில் பார்த்தும் கூட, இந்த மசூதி இடிப்பு பொய்யான தகவல் என்று மறுத்துள்ளது.

பல்வேறு தரப்பினர் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த மசூதி இடிப்பு உண்மைதான்.

இதை திட்டமிட்டு நடத்தி இருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். பாபர் மசூதிக்கு பின் டெல்லியில் தற்போது பாதீ மசூதி தாக்கப்பட்டுள்ளது.

இது பெரிய பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள். பல தரப்பும் இந்த செய்தியின் உண்மை தன்மையை நிரூபித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *