மாட்டுச் சாணம் செல்போனின் கதிர்வீச்சைக் குறைக்கும் என தேசிய காமதேனு ஆணையத்தின் தலைவர் வல்லபாய் கதிரியா தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
மத்திய மீன்வள, கால்நடை பராமரிப்பு மற்றும் பால் உற்பத்தி அமைச்சகத்தின் நிறுவனமாக தேசிய காமதேனு ஆணையம் உள்ளது.
இது கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6 அன்று மத்திய அரசால் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் திங்களன்று மாட்டுச் சாணத் தயாரிப்புகளை ஊக்குவிக்கும் நோக்கில் நாடு தழுவிய பிரசாரமான “காம்தேனு தீபாவளி அபியான்” திட்டத்தை அறிமுகப்படுத்திய தேசிய காமதேனு ஆணையத்தின் தலைவர் வல்லபாய் கதிரியா மாட்டுச்சாணத்தால் செய்யப்பட்ட செல்போன் சிப் ஒன்றை வெளியிட்டார்.
“செல்போனிலிருந்து வரும் கதிர்வீச்சைக் கட்டுப்படுத்துவதற்காக மாட்டுச் சாணத்திலிருந்து சிப் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த “சிப்”-ஆல் நோய்களைத் தவிர்க்க முடியும்.” என அவர் தெரிவித்தார்.
ரூ.50 முதல் ரூ.100 வரை விலையில் கிடைக்கும் கெளவ் கவாச் என்று அழைக்கப்படும் இந்த சிப், குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள ஸ்ரீஜி கோசாலையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
“அறிவியல் முறையில் நிரூபிக்கப்பட்ட இந்த சிப் மத்திய அரசின் சோதனை மற்றும் தரச்சான்றிதழைப் பெறவில்லை.” எனத் தெரிவித்த வல்லபாய் கதிரியா “ஆனால் இதனை சோதித்துப் பார்த்திருக்கிறோம்.” எனக் குறிப்பிட்டார்.
மாட்டுச்சாணம் மூலம் மெழுகுவர்த்திகள், ஊதுபத்திகள், விநாயகர் மற்றும் லட்சுமியின் சிலைகள் போன்ற தயாரிபுகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாட்டுச் சாணம் செல்போன் கதிர்வீச்சைக் கட்டுப்படுத்தும் எனும் தேசிய காமதேனு ஆணையத்தின் தலைவரின் கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.