100 பேரை கொலை செய்து முதலைகளுக்கு வீசிய டெல்லி மருத்துவர்

ஆயுர்வேத மருத்துவர் தேவேந்திர சர்மா 1984-ம் ஆண்டு தன் படிப்பை முடித்துவிட்டு முதன்முதலாக ராஜஸ்தானில் ஒரு சிறிய கிளீனிக் ஆரம்பித்து நடத்தி வந்துள்ளார்.

பின்னர் தன் தொழிலில் முன்னேற்றம் இல்லாததால் 1994-ம் ஆண்டு 11 லட்சம் முதலீடு செய்து ஒரு கேஸ் நிறுவனம் தொடங்கியுள்ளார், அதே ஆண்டு அந்தத் தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டு மிகவும் சிரமப்பட்டுள்ளார்.

பின்னர் அதே கேஸ் நிறுவனத்தைப் போலியாக மாற்றியுள்ளார்.

அதையடுத்து தனக்குக் கீழ் ஒரு கும்பலை பணியமர்த்தி, அவர்கள் மூலம் டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தேசிய நெடுஞ்சாலையில் இயங்கும் கேஸ் லாரிகளை வழி மறித்து அதன் ஓட்டுநர்களைத் தொடர்ச்சியாகக் கொலை செய்து, கேஸ் சிலிண்டர்களைத் திருடி கள்ளத்தனமாக விற்பனை செய்து வந்துள்ளார்.

1995 முதல் இதே போன்று தொடர்ச்சியாகப் பல கொலைகள் செய்து வந்துள்ளார்.

கொலை செய்த ஓட்டுநர்களின் உடல்களைத் துண்டாக்கி உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒரு கால்வாயில் முதலைகளுக்கு இரையாகப் போட்டுள்ளார்.

பின்னர் மருத்துவர் செய்துவந்த கொலைகள் வெளிச்சத்துக்கு வரவே, தேவேந்திர சர்மா கைது செய்யப்பட்டு சில ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்துவந்தார்.

அதிலிருந்து விடுதலையான பிறகு, தன் மருத்துவர் தொழிலைப் பயன்படுத்தி கிட்னி திருடும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

2002-ம் ஆண்டு இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. அப்போது இவரது வழக்கு தொடர்பாக நடந்த விசாரணை மொத்த காவல்துறையையும் அதிர வைத்தது.

இதையடுத்து 2004-ம் ஆண்டு நடந்து முடிந்த இந்த வழக்கில் மருத்துவர் சர்மாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணையின் போது மருத்துவர் சர்மாவின் வழக்கு ‘டாக்டர் டெத்’ என அழைக்கப்பட்டு வந்தது.

மருத்துவர் சர்மா கைது
மருத்துவர் சர்மா கைது

தொடர்ந்து ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஜனவரி மாதம் 20 நாள்கள் பரோலில் வெளியில் வந்தார். பரோலில் இருக்கும்போதே இவர் திடீரென தலைமறைவானார்.

இவரைத் தேடும் பணியில் பல காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இருந்தும் சர்மா இருக்கும் இடம் தெரியாமலே இருந்துள்ளது.

பின்னர் மார்ச் மாதம் முதல் டெல்லியில் உள்ள தன் உறவினர் வீட்டில் ரகசியமாகத் தங்கி, மே மாதம் ஒரு பெண்ணை இரண்டாவது முறையாகத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஜூலை 28-ம் தேதி மருத்துவர் சர்மா இருக்கும் இடமும் அவர் மீண்டும் கிட்னி திருடும் தொழிலில் ஈடுபடுவதாகவும் டெல்லி குற்றவியல் அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து நடந்த திடீர் சோதனையில் மருத்துவர் சர்மா அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

தன் வாழ்வில் பாதி வீணானதாகவும் அதனால் புதிய வாழ்க்கை தொடங்குவதற்காகவே பரோலில் இருந்து தப்பித்ததாகவும் காவலர்களிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் மருத்துவர் சர்மா.

இவரது கைதுக்குப் பிறகு 16 ஆண்டுகளுக்கு முன்பு இவர் செய்த கொலை தொடர்பாக விஷயங்கள் அனைத்தும் மீண்டும் வைரலாகியுள்ளன.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே