கொரோனா பாதிப்புடன் மதுரையில் சிகிச்சை பெற்றுவந்த 54 வயது நபர் உயிரிழந்தார்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே 15 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று இரவு 3 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர்  விஜயபாஸ்கர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், நியூசிலாந்து மற்றும் லண்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்தார்.

இதன் மூலம் தமிழகத்தில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்தது.

இவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவித்தார். 

இந்நிலையில், கொரோனா பாதிப்புக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நீண்ட நாட்களாக அவருக்கு உடல் நலக்குறைவு இருந்த நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டதால், அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார்.

உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த அந்த நபருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த போதும், உடல் ஒத்துழைக்காததால் உயிரிழந்ததாக அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் தெரிவித்தார்.

இதன் மூலம் கொரோனா பாதிப்புக்கு தமிழகத்தில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

இவர் வெளிநாட்டு பயணங்கள் எதுவும் மேற்கொள்ளாமல் வைரஸ் தொற்று ஏற்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த முதல் நபர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட பலரும் வெளிநாடுகளில் இருந்த வந்தவர்களாக இருக்கும் நிலையில்,

தற்போது சமூக பரவலின் மூலம் ஏற்பட்ட தொற்றால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது பலரையும் கவலையடையச் செய்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே