CAA-வுக்கு எதிராக குரல் கொடுக்கும் திரையுலக பிரபலங்கள்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திரையுலக பிரபலங்கள் பலரும் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் தொடங்கிய இந்த போராட்டங்கள், மெல்ல மெல்ல மேற்கு வங்கம், டெல்லி, கேரளா என மற்ற மாநிலங்களுக்கும் பரவின.

மேற்கு வங்கத்தில் பல்வேறு பகுதிகளில் பேருந்துகள், ரயில்கள் எரிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதே போன்று டெல்லி ஜாமியா மிலியா, அலிகர் மற்றும் ஜேஎன்யூ பல்கலைக்கழக வளாகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீஸார் அத்துமீறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நாட்டின் பல்வேறு இடங்களில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன சூழலில், என்ன நடந்தாலும் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்தியே தீருவோம் என்றும்; சட்டத்தை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஆனாலும் இந்த சட்டத்திற்கு பொதுமக்கள், மாணவர்கள் மட்டுமின்றி திரைத்துறையினர் மத்தியிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

ஒட்டுமொத்த கேரள திரையுலகமும் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து கருத்து தெரிவித்திருப்பது நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ஜாமியா மிலியா பல்கலைக்கழக போராட்டத்தில் மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து கருத்து தெரிவித்துள்ள நடிகர் மம்முட்டி ஜாதி, மதம் போன்ற பாகுபாடுகளைக் களைந்தால் தான் நம்மால் ஒரு தேசமாக முன்னேற முடியும் என தெரிவித்துள்ளார்.

மதச் சார்பின்மை, ஜனநாயகம், சமத்துவம் ஆகியவை நமது பிறப்புரிமை என்றும், அதை அகிம்சை முறையில் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்றும் மம்முட்டியின் மகனும், நடிகருமான துல்கர் சல்மான் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்று பிரித்விராஜ், பார்வதி, டோவினோ, அமலாபால் ஆகியோரும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவுசெய்துள்ளனர்.

மேலும், சிறந்த மலையாளப் படமாகத் தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள சுடானி ஃப்ரம் நைஜீரியா படக்குழுவினர், தேசிய விருது விழாவைப் புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்கள்.

பிரதமர் மோடியும், அமித் ஷாவும் அர்ஜூனன், கிருஷ்ணர் அல்ல என்றும்; சகுனியும், துரியோதனனும் என்று மறைமுகமாக விமர்சித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் நடிகர் சித்தார்த்.

அதேபோல் இந்த பூமி எவனுக்கும், எவன் அப்பன் வீட்டு சொத்தும் கிடையாது என கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.

இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும், இந்துக்களின் ரத்த சொந்தங்கள் என்றும்; இவர்களுக்கு இடையே பிரிவினையை ஏற்படுத்தும் பொய்பிரச்சாரங்கள் ஒருகாலத்திலும் செல்லுபடியாகாது என்றும் தெரிவித்துள்ளார் நடிகர் ராஜ் கிரண்.

இதேபோல் பாலிவுட் நடிகர்கள் பலரும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்தும், மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

நம் நாட்டில் போராடுவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது என்றும் காந்தி பிறந்த நாட்டில் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் நடிகர் ஆயுஷ்மான் குரானா தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டு இருப்பதால் ஜனநாயக நாடு எனும் அந்தஸ்தை நாம் இழந்து விட்டதாக நடிகை பரினீதி சோப்ரா வேதனையை பதிவு செய்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது ஜனநாயகத்துக்கு விரோதமானது என சித்தார்த் மல்கோத்ரா கூறியுள்ளார்.

நாட்டில் நடக்கும் இந்த சம்பவங்கள் எல்லாம் ஆரம்பமா?? இல்லை முடிவா?? எனத் தெரியவில்லை என்றும் நம் நாட்டிற்கு புதிய சட்டங்கள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றும் நடிகை டாப்ஸியை விமர்சித்துள்ளார்.

இதேபோன்று வருண் தவான், ஹுமா குரேஷி, ரித்திஷ் தேஷ்முக், ஃபரன் அக்தர், ராஜ்குமார் ராவ், அதிதி ராவ் உள்ளிட்டோரும் கடும் எதிர்ப்புகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே