பரோலில் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பேரறிவாளன்..!!

கரோனா தொற்றுப்பரவல் காரணமாக மகனின் பாதுகாப்பு கருதி நீண்ட விடுப்பு கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் வைத்த கோரிக்கையை ஏற்று 30 நாட்கள் சாதாரண விடுப்பில் விடுவிக்கப்பட்டதை அடுத்து சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு உயர் நீதிமன்றம் பல முறை பரோல் தந்துள்ளது. உச்ச நீதிமன்றமும் பரோல் வழங்கியுள்ளது.

தற்போது பேரறிவாளன் விடுதலை கோரும் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலையில், நாடெங்கும் கரோனா இரண்டாவது பரவல் அலை அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் முடக்கத்தை ஏற்படுத்திய பெருந்தொற்றால் சிறைக்கைதிகள் பாதிக்கப்படாமல் இருக்கத் தேவைப்படின் பரோல் வழங்கவும் கோரிக்கை வலுத்து வருகிறது.

பேரறிவாளன் நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தொற்று எளிதில் பரவும் அபாயம் உள்ளது. பேரறிவாளன் நிலையைக் கருத்தில் கொண்டும், அவரது உடல்நிலை மற்றும் கரோனா பரவலைக் கருத்தில் கொண்டும் அவருக்கு நீண்ட விடுப்பு வழங்கிட வேண்டும் என, அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த மே 18 அன்று முதல்வர் ஸ்டாலினுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், பேரறிவாளனுக்கு, உரிய விதிகளைத் தளர்த்தி, 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கி மே 19 அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

‘முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைதாகி, ஆயுள் தண்டனை பெற்று, தற்போது சென்னை புழல் மத்திய சிறையில் இருந்துவரும் ஏ.ஜி.பேரறிவாளனுக்கு, மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் விடுப்பு வழங்க வேண்டுமென அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்குக் கோரிக்கை அளித்திருந்தார்.

அந்தக் கோரிக்கையை பரிசீலித்து பேரறிவாளனுக்கு, உரிய விதிகளைத் தளர்த்தி, 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கப்படுகிறது’ என அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் அரசு அறிவித்தப்படி பேரறிவாளன் இன்று காலை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். சென்னை புழல் சிறையில் மருத்துவப் பரிசோதனைகள் முடிந்த போலீஸ் பாதுகாப்புடன் தன் சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்கு பேரறிவாளன் சென்றார். அவருடன் பாதுகாப்புக்காக போலீஸார் சென்றுள்ளனர்.

பரோலில் உள்ள பேரறிவாளன் பத்திரிகைகளுக்குப் பேட்டி அளிக்கக்கூடாது, கூட்டங்கள் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது உள்ளிட்ட சிறை விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்ற விதியின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே