நடிகர் விவேக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை வாயில் முன் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், தடுப்பூசியையும் அவரது உடல் நலனையும் ஒப்பிட்டும், கரோனா இந்தியாவிலேயே இல்லை, அரசு ஏமாற்றுகிறது என்றெல்லாம் சர்ச்சைக்குரிய வகையில் பேட்டி அளித்தார். இதுகுறித்து சென்னை மாநகராட்சி அளித்த புகாரின்பேரில் 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

நடிகர் விவேக் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வண்ணம் தடுப்பூசி போட்டுக்கொண்டு பேட்டி அளித்தார். மறுநாள் வீட்டில் இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அங்கு வந்த நடிகர் மன்சூர் அலிகான் மக்களுக்கு பயத்தை ஏற்படுத்தும் வண்ணம், ”தடுப்பூசிதான் அவரது இன்றைய நிலைக்குக் காரணம். அவருக்கு மட்டும் ஏதாவது ஆனால் சும்மா இருக்க மாட்டேன்” என்று பேட்டி அளித்தார். தொடர்ந்து அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இந்தியாவில் கரோனாவே இல்லை, எதற்காக முகக்கவசம் அணிகிறீர்கள் என்றெல்லாம் கேள்வி எழுப்பினார். சுகாதாரத் துறைச் செயலர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.

இதையடுத்து அவர் மீது சென்னை மாநகராட்சி சார்பில் 10-வது மண்டல சுகாதார அலுவலர் பூபேஷ் அளித்த புகாரின் பேரில் வடபழனி போலீஸார் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சுகாதார அலுவலர் பூபேஷ் அளித்த புகார் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

”புகார்தாரர் பூபேஷ் சென்னை மாநகராட்சி மண்டலம் 10-ல் சுகாதார அலுவலராகப் பணிபுரிந்து வருகிறார். நடிகர் மன்சூர் அலிகான், நெஞ்சு வலி காரணமாக வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக்கின் உடல் நலன் குறித்து விசாரிக்க வந்தார்.

அந்த நேரம் பத்திரிகையாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான் அரசிற்கும், மருத்துவ அறிவியலுக்கும் எதிராக அவதூறுச் செய்திகளை வெளியிட்டு பொதுமக்களிடையே கரோனா பெரும் தொற்று என்று இல்லாத ஒன்றை இருப்பதாக அரசுகள் தொடர்ந்து பொய் சொல்லி ஏமாற்றி வருவதாகக் கூறினார். யாரும் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்றும், இதயத்தில் அடைப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற விவேக் தடுப்பூசி காரணமாகத்தான் இந்த நிலைமைக்குச் சென்றார் என்ற அவதூறு செய்தியை பேட்டியில் தெரிவித்துள்ளார்.

எனவே, மன்சூர் அலிகானின் இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அரசின் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அரசின் மக்கள் நலப் பணிக்கு எதிராக இருப்பதாலும் அவர் மீது நடவடிக்கை கோரி அளித்த புகாரின் பேரில், IPC 153 (கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசுதல், தூண்டிவிடுதல்), 270 (தொற்றுப்பரவல் தடைச் சட்டத்தை மீறுதல்), 505(1),(b) (சமூக வலைதளங்கள், காட்சி ஊடகங்கள் மூலம் அவதூறு பரப்புதல், பொதுமக்களைத் தூண்டிவிடுதல்), தொற்றுநோய் தடுப்புச் சட்டம் (Section 3 of Epidemic Deceased Act – 1897), பேரிடர் மேலாண்மைச் சட்டம் (Section 54 of the Disaster Management t Act – 2005) குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது”.

இவ்வாறு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே காவல்துறை வழக்குப் பதிவு செய்தால் தாம் கைது செய்யப்படுவோம் என அஞ்சி, மன்சூர் அலிகான் நேற்றே முன் ஜாமீன் மனுத்தாக்கல் செய்தார். வழக்கு இன்னும் விசாரணைக்கு வரவில்லை.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே