திமுக எம்எல்ஏ மோகன் உள்ளிட்ட 5 பேர் விடுதலை..!!

ரேசன் பொருட்கள் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் திமுக எம்.எல்.ஏ. எம்.கே.மோகன் உள்ளிட்ட 5 பேரை சென்னை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டு நியாய விலை கடைகளில் விற்கப்படும் பொருட்களின் விலையை தமிழக அரசு உயர்த்தியதை கண்டித்து சென்னை அண்ணா நகர் பகுதியில் உள்ள அனைத்து ரேஷன் கடை முன்பும் திமுக தரப்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதில் அண்ணாநகர் எம்.எல்.ஏ.,எம்.கே.மோகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக அரும்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சட்டவிரோதமாக ஒன்றுகூடுதல் அரசு ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் எம்.கே.மோகன், அதியமான், ஏ.எம்.வேலாயுதம், சந்திரபாபு, செல்வம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யபட்டது.

இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., – எம்.எல்.ஏ., க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஆலிசியா, வழக்கிலிருந்து அண்ணா நகர் எம்.எல்.ஏ. எம்.கே.மோகன் உள்ளிட்ட 5 பேரையும் விடுதலை செய்வதாக உத்தரவிட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டம் நடத்தியது தொடர்பாக புகார் ஏதும் கொடுக்கப்படாத நிலையில், காவல்துறை புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ளதால் அனைவரையும் விடுதலை செய்வதாக தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே