திரைப்படங்களில் நகைச்சுவை என்பது பொழுதுபோக்காக மட்டுமே பார்க்கப்பட்ட நிலையில், அதில் தனது சமூக சீர்த்திருத்த கருத்துகளை உதிர்த்து, மக்களை மகிழ்வித்தவர், சின்னக் கலைவாணர் என்று அழைக்கப்படும் விவேக். ஊருக்கு மட்டுமே உபதேசம் என்றில்லாமல்; சினிமாவில் பேசிய சீர்த்திருத்தங்களை, தனது பொதுவாழ்விலும் நிகழ்த்திக் காட்டிய விவேக்கின் 43 வருட கலையுலக பயணத்தை தற்போது பார்க்கலாம்…………

1961 ஆம் ஆண்டு மதுரையில் பிறந்த விவேக், 80-களின் இறுதியில் சின்னத்திரையில் அறிமுகமானார். இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் பயிற்சிப் பட்டறையில் இருந்து பட்டைத் தீட்டப்பட்ட வைரங்களில் விவேக்கும் மிக முக்கியமானவர். 1987 இல் வெளியான ‘மனதில் உறுதி வேண்டும்” படத்தில் சிறிய வேடத்தில் தோன்றியதன் மூலம், வெள்ளித்திரையில் அடியெடுத்து வைத்த அவர், அதனைத் தொடர்ந்து நடித்த ‘புது புது அர்த்தங்கள்” படம் மூலம் ரசிகர்கள் மனதில் தனி கவனம் இடம்பெற்றார். அப்படத்தில் ஒல்லியான தேகம், பெரிய கண்ணாடியுடன் அவர் பேசிய ‘இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்” என்ற வசனம் விவேக்கை மிகவும் பிரபலமாக்கியது.

‘கேளடி கண்மணி’, ‘இதயவாசல்’, ‘நண்பர்கள்’ என அடுத்தடுத்து பல படங்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்த விவேக், ‘உழைப்பாளி’, ‘வீரா’ என ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார். அடுத்த தலைமுறை நாயகர்களான பிரசாந்த், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், மாதவன், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும், தவிர்க்க முடியாத அளவிற்கு, அவர்களின் நண்பனாக காமெடியில் கலக்கிய விவேக்கை, ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். பஞ்ச் அடிப்பது, அடுக்கு மொழி வசனங்கள் பேசுவது என, நாயகர்களுக்கு இணையாக, ரசிகர்களின் விசில் சப்தங்களும், கைத்தட்டல்களும் விவேக்கிற்கும் சொந்தமானது.

நாயகர்களின் நண்பனாக படங்களில் தோன்றினாலும், ஒரே மாதிரியான நகைச்சுவையை வழங்காமல், சமூக சீர்த்திருத்த கருத்துகளை மிக நேர்த்தியாக தனது வசனங்களில் உட்படுத்தி, அதன் வழியாக புதிய புரட்சிகளை செய்தார். ஜாதிய பாகுபாடு, பெண்ணடிமைத்தனம், சிசுக் கொலை, மூட நம்பிக்கை, லஞ்சம், ஊழல் போன்ற சமூகத்தில் புரையோடிக் கிடந்த பல அவலங்களை, நகைச்சுவைகள் மூலம் தோலுரித்துக் காட்டியதோடு, அவைகள் குறித்து அனைவரையும் சிந்திக்கவும் தூண்டினார். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்குப் பிறகு, நகைச்சுவைகளில் சமூக சீர்த்திருத்தங்கள் பற்றி அதிகம் பேசியதே, விவேக்கிற்கு சின்ன கலைவாணர் என்ற பெயர் வருவதற்கும் காரணமானது.

‘மிடில் கிளாஸ் மாதவன்’, ‘மனதைத் திருடிவிட்டாய்’ உள்ளிட்ட சில படங்களில், வைகைப்புயல் வடிவேலுவுடன் இணைந்து விவேக் அடித்த லூட்டிகள், ரசிகர்களின் வயிறை பதம் பார்த்தன. விவேக் நடித்த பல படங்கள், வணிக ரீதியான வெற்றியடைய அவரது நகைச்சுவைகள் பெரும் பலமாக அமைந்தன. ‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்’, ‘நீங்க வெறும் தாஸா, இல்ல லாடு லபக்கு தாஸா..?’. ‘எனக்கு ஐ.ஜி-யை நல்லா தெரியும்!, ஆனா அவருக்கு என்ன தெரியாது’, ‘எரிமலை எப்படி வெடிக்கும்’ போன்ற வசனங்கள் விவேக்கின் ட்ரேட் மார்க் வசனங்கள்.

தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்கள் பலருடனும் இணைந்த விவேக், இதுவரை கமல்ஹாசனுடன் மட்டுமே நடிக்க முடியாமல் போனது ரசிகர்களுக்கு ஏமாற்றமே. விதவிதமான உடல் மொழி, வித்தியாசமான வசன உச்சரிப்புகள், சமூக சீர்த்திருத்த நகைச்சுவைகள் என, ரசிகர்களை மகிழ்வித்த மகத்தான கலைஞன் அவர். 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விவேக், 2020 ஆம் ஆண்டு வெளியான தாராள பிரபு படத்தில் இறுதியாக நடித்திருந்தார். சினிமாவில் விவேக் செய்த சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக, மிக உயரிய விருதான பத்மஸ்ரீ, ஏசியாநெட் திரைப்பட விருதுகள், தமிழக அரசின் விருதுகள், பிலிம்பேர் விருதுகள் உள்ளிட்ட ஏராளமான விருதுகளை அவர் பெற்றுள்ளார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவாக, கிரீன் கலாம் என்ற அமைப்பை தொடங்கி, தமிழகம் முழுவதும் பல லட்சம் மரங்களை நட்டு, அளப்பெரிய சாதனைகளையும் செய்த சின்ன கலைவாணர் விவேக், தமிழ் சினிமாவின் மாபெரும் சகாப்தம்!.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே