தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: சொந்தத் தொகுதியில் பிரச்சாரத்தை முடித்த பழனிசாமி, ஸ்டாலின், சீமான், தினகரன்

தமிழகத்தில் கடந்த ஒருமாத காலமாக நடந்த தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 7 மணியுடன் நிறைவு பெற்றது. முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சீமான், கமல் உள்ளிட்டோர் அவரவர் சொந்தத் தொகுதியில் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் 16-வது தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ஆம் தேதி நடக்க உள்ளது. இந்தத் தேர்தலில் முதன்முறையாக ஜெயலலிதா, கருணாநிதி இல்லாமல் திமுக, அதிமுக கட்சிகள் களம் காண்கின்றன. இரண்டு கட்சிகளிலும் புதிய தலைவர்கள் களம் காண்கின்றனர்.

திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல், மமக, மஜக, கொமதேக, தவாக உள்ளிட்ட கட்சிகளும், அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகளும், அமமுக, தேமுதிக, எஸ்டிபிஐ, ஒவைசி கட்சிகள் இணைந்து கூட்டணியாகவும், மநீம, சமத்துவ மக்கள் கட்சி, ஐஜேகே இணைந்து கூட்டணியாகவும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களத்தில் உள்ளன.

தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், பாஜக வேட்பாளர்களும் களம் காண்கின்றனர். வாக்குப் பதிவு நாள் ஏப்ரல் 6 என்பதால் இன்று மாலை 7 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இதற்காக இறுதிக்கட்டப் பிரச்சாரம் வேகமாக நடக்கிறது.

தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் அவரவர் சொந்தத் தொகுதியில் இறுதிக்கட்டத் தேர்தல் பிரச்சாரத்தை முடித்தனர். முதல்வர் பழனிசாமி எடப்பாடியிலும், திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கோவில்பட்டியிலும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூரிலும், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல் கோவை தெற்கிலும் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர். மாலை 7 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.

தமிழகம் முழுவதும் மொத்தம் 88,937 வாக்குச்சாவடிகள் அமைக்கப் பட்டுள்ளன. இவற்றில் 537 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவையாகவும், 10,830 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகவும் தேர்தல் ஆணையத்தால் அடையாளம் காணப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் தேவையான 1,55,102 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்,1,14,205 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 1,20,807 விவிபாட் இயந்திரங்கள் ஆகியவை தயார் நிலையில் உள்ளன. இந்தத் தேர்தலில் 3,8,38,473 ஆண் வாக்காளர்கள், 3,18, 28,727 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 6, 26, 74,446 பேர் வாக்களிக்க உள்ளனர்.

கடைப்பிடிக்க வேண்டிய நடை முறைகள்:

  • 4-ம் தேதி இரவு 7 மணி முதல் வாக்குப் பதிவு முடியும் வரை தேர்தல் தொடர்பான எந்த ஒரு பொதுக் கூட்டத்தையோ ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ, அவற்றில் பங்கேற்கவோ கூடாது.

*எந்த ஒரு தேர்தல் விவகாரத்தையும் திரைப்படம், தொலைக்காட்சி, பண்பலை வானொலி, வாட்ஸ் அப், முகநூல், ட்விட்டர் போன்ற அல்லது இதுபோன்ற சாதனம் வாயிலாகப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது. குறுஞ்செய்தி மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.

  • பொதுமக்களில் எந்தவொரு நபரையும் ஈர்க்கும் வகையில் இசை நிகழ்ச்சி, திரையரங்கச் செயல்பாடு அல்லது பிற கேளிக்கை, பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்தவோ, ஏற்பாடு செய்யவோ, தேர்தல் தொடர்பாக பிரச்சாரம் செய்யவோ கூடாது.

*இந்த விதிமுறைகள் மீறப்பட்டால் 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவை 2-ம் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

*தொகுதிக்கு வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் ஆகியோர் மற்றும் அத்தொகுதியில் வாக்காளர்கள் அல்லாதோர் 4-ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் அந்தத் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

*திருமண மண்டபம், சமுதாயக் கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பது குறித்து கண்காணிக்கப்படும். வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திரப் பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள், 4-ம் தேதி இரவு 7 மணி முதல் செல்லாது.

  • வாக்குப்பதிவு நாளன்று ஒவ்வொரு வேட்பாளரும் அவரது சொந்தப் பயன்பாட்டுக்காக ஒரு வாகனம், தேர்தல் முகவரின் பயன்பாட்டுக்காக ஒரு வாகனம் மற்றும் கூடுதலாக, அவரது பணியாளர்கள் அல்லது கட்சிப் பணியாளர்களின் பயன்பாட்டுக்காக ஒரு வாகனம் ஆகியவற்றுக்கு அனுமதி பெற உரிமை உண்டு.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே