இயற்கை எரிவாயு குழாய் திட்டம் தொடக்கம்..!!

கொச்சி – மங்களூரு இடையேயான குழாய் மூலம் இயற்கை எரிவாயு விநியோகிக்கும் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.

450 கி.மீ நீளமுள்ள இந்த குழாய்வழி எரிவாயு திட்டத்தை கெயில் இந்தியா நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தை தொடக்கி வைத்து பேசிய மோடி, கேரளா மற்றும் கர்நாடகா மாநில மக்களுக்கு முக்கியமான நாள் என்று குறிப்பிட்டார்.

3 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 12 மில்லியன் மெட்ரிக் ஸ்டாண்டர்டு கியூபிக் மீட்டர் இயற்கை எரிவாயு கொச்சியில் உள்ள எல்என்ஜி நிறுவனத்திலிருந்து எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களை கடந்து கர்நாடகாவில் உள்ள மங்களூருக்கு செல்லும்.

இந்த குழாய் வழி எரிவாயு திட்டம், வீடுகளுக்கும், வாகனங்களுக்கும் சுற்றுசூழலுக்கு உகந்த இயற்கை எரிவாயுவை விநியோகிக்கும்.

இந்த குழாய்கள் அமைந்துள்ள மாவட்டங்களில், வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான இயற்கை எரிவாயுவும் விநியோகிக்கப்படும்.

சுத்தமான எரிபொருள் நுகர்வு, காற்று மாசுவை குறைத்து, காற்றின் தரத்தை மேம்படுத்த உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் முரளிதரன், மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை, நாடளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன், கர்நாடகா மாநில முதல்வர் எடியூரப்பா, கேரளா மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான், கர்நாடகா மாநில ஆளுநர் வஜூபாய் வாலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய பிரதமர் மோடி, 450 கிலோமீட்டர் தூரமுள்ள இயற்கை எரிவாயு குழாய்த் திட்டத்தை இந்த நாட்டிற்கு அர்ப்பணிப்பதில் பெருமையடைகிறேன்.

இது இந்தியாவிற்கு குறிப்பாக கேரளா மற்றும் கர்நாடகா மாநில மக்களுக்கு முக்கியமான நாள்.

இதன் மூலம் கர்நாடகா, கேரளாவில் பொருளாதாரம் வளர்ச்சியடையும். மெதுவாக முன்னேற்றமடைந்து வந்த இந்தியாவில் வளர்ச்சியும் வேகமும் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளது என்றார் மோடி.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே