பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்திய வருகை ரத்தானது. இது குறித்து அவரது அலுவலகம் தரப்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வரும் ஜனவரி 26-ம் தேதி இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள போரிஸ் ஜான்சனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அழைப்பை ஏற்றுக்கொண்ட அவர், இந்திய வருகையை உறுதி செய்தார். இருநாட்டுத் தரப்பிலும் அதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்றுவந்தன.

இந்தச் சூழலில், பிரிட்டனில் உருமாறிய கரோனா வைரஸ் வேகமாகப் பரவத் தொடங்கியது. அங்கு, நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், அங்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.

உருமாறிய கரோனா முதன்முதலில் பிரிட்டனில் கண்டறியப்பட்டதால், ஐரோப்பிய நாடுகள் பலவும் பிரிட்டனில் இருந்து வரும் விமானங்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது.

இந்தியாவும் பிரிட்டன் விமானங்களுக்கு தடை விதித்திருந்த நிலையில் ஜனவரி 6-ல் இருந்து விமான சேவை மீண்டும் தொடங்கும் என அறிவித்தது.

இவ்வாறாக பிரிட்டனின் உருமாறிய கரோனா அனைத்து நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ள நிலையில் குடியரசு தின விழாவிற்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சிறப்பு விருந்தினராக வருவதும் கேள்விக்குறியானது.

இதுதொடர்பாக ஊகங்கள் அடிப்படையில் செய்திகள் உலாவந்த நிலையில், தற்போது பிரிட்டன் பிரதமரின் இந்திய வருகை ரத்து செய்யப்பட்டது அதிகாரபூர்வமாக உறுதியாகியுள்ளது.

இது தொடர்பாக பிரிட்டன் பிரதமர் அலுவலகம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று காலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினார்.

அப்போது, ஏற்கெனவே திட்டமிட்டபடி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள இயலாமல் போனதற்கு வருத்தம் தெரிவித்தார்.

இந்த பேரிடர் காலத்தில் இருநாடுகளுக்கும் இடையேயான நட்புறவை பலப்படுத்தும் முயற்சிகள் தொடரும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், “உள்நாட்டில் நெருக்கடியான காலகட்டம் நிலவும் சூழலில் தனது இருப்பு மிகவும் அவசியமானது என பிரதமர் போரிஸ் ஜான்சன் கருதுவதாக” அவருடைய செய்தித்தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

உருமாறிய கரோனா வைரஸ் பரவலால், இங்கிலாந்தில் வரும் பிப்ரவரி மாதம் வரை முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே