பிளாஸ்மா தானம் செய்ய முன்வாருங்கள் என்று கரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி, “கொரோனா தடுப்புக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் தேவையான அளவு தமிழகத்தில் இருப்பு உள்ளன.
அரசின் நடவடிக்கையால் மதுரையில் கொரோனா பரவல் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது.
சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை எடுத்த நடவடிக்கையால் மதுரையில் கொரோனா குறைந்துள்ளது. மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் 4,000 காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
மதுரை அரசுக் கல்லூரியில் புற்றுநோய் சிகிச்சைக்கு அதிநவீன கருவி அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக கொரோனா பரிசோதனை செய்த மாநிலம் தமிழகம் தான்.
இன்னும் ஒரு மாதத்தில் ரூ.103 கோடியில் 500 ஆம்புலன்ஸ்கள் வாங்கப்பட உள்ளன. கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள், தேவையான மருந்துகள் இருப்பில் உள்ளன.
மதுரை தமுக்கம் மைதானத்தில் கலாச்சார மையம் அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்கியுள்ளது.
மதுரை மாநகர் மற்றும் மாவட்ட மக்களின் நலனுக்காக அரசு அதிக நிதி ஒதுக்கி திட்டங்களை நிறைவேற்றுகிறது. மதுரை மாநகரில் 4,000 புறநகரில் 8,000 என 12,000 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டன.
இ பாஸ் முறையை எளிமையாக்க கூடுதலாக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அதிக பரிசோதனைகள் செய்வதால் கொரோனா எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகக் தோன்றுவதை தவிர்க்க இயலாது.
கொரோனா உயிரிழப்புகளை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு கிடையாது. கொரோனா நோயாளிகளை குணப்படுத்த பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும்” என தெரிவித்தார்.