பன்னாட்டு மலர் ஏல மையத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ரூ.20.20 கோடி மதிப்பில் பன்னாட்டு மலர் ஏல மையம் அமைக்கும் பணிக்கான அடிக்கல்லை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாட்டினார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வினை மேற்கொள்ள இன்று (ஜூலை 15) காலை 10.30 மணிக்கு கிருஷ்ணகிரிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி வருகை தந்தார்.

அப்போது, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், ஓசூர் அருகே மோரனப்பள்ளியில் ரூ.20.20 கோடி மதிப்பில் பன்னாட்டு மலர் ஏல மையம் அமைக்கப்படுவதற்கான அடிக்கல்லை காணொலி மூலம் முதல்வர் பழனிசாமி நாட்டினார்.

முன்னதாக, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

இந்நிகழ்வின் போது, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை ஆணையர் சுன்சோங்கம் ஜடக்சிரு, மாவட்ட ஆட்சியர் பிரபாகர், மாநிலங்களவை உறுப்பினர்கள் கே.பி.முனுசாமி, தம்பிதுரை, எம்எல்ஏக்கள் சி.வி.ராஜேந்திரன், மனோரஞ்சிதம், அதிமுக மாவட்டச் செயலாளர் அசோக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஓசூர் – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் மோரனப்பள்ளியில் 7.68 ஏக்கர் பரப்பளவில் ரூ.2,0.20 கோடி திட்ட மதிப்பில் பன்னாட்டு மலர் ஏல மையம் அமைய உள்ளது.

இந்த மையத்தில் 3,702 ஏக்கர் பரப்பளவில் மலர் சாகுபடி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மலர் ஏல மையத்தில் ஜெர்பரா, கார்னேசன், ரோஜா, மேரிகோல்டு உள்ளிட்ட மலர் வகைகள் சாகுபடி செய்யப்பட உள்ளன.

அதன்படி, சுமார் 39 ஆயிரத்து 383 டன் மலர் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா, ஐக்கிய அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் அரசுக்கு ரூ.150 கோடி முதல் ரூ.200 கோடி வரையில் அந்நியச் செலாவணி கிடைக்கும்.

இந்த மலர் ஏல மையம் மூலம் மலர் சாகுபடி விவசாயிகள் பயன்பெறுவார்கள். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே