டிடிவி தினகரனின் அன்னையர் தின வாழ்த்து

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அடியொட்டி செயல்படுகிற நாம் தாய்மையை மகிழ்ந்து கொண்டாடுவோம் என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலர் டிடிவி தினகரன் தமது அன்னையர் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த அன்னையர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தியாகத்தின் மறு உருவமாக, கண்கண்ட கடவுளாக தாய் இருப்பதால்தான் அவரை முதலிடத்தில் வைத்து வணங்குகிறோம்.

எதிர்பார்ப்பில்லாத அன்பு, எப்போதும் அரவணைக்கிற பண்பு, தேவையான இடத்தில் கண்டிப்பு, பலனை எதிர்பார்க்காத பாசம் போன்ற போற்றத்தக்க குணங்களின் ஒருமித்த அடையாளமாக இருப்பது தாய்மை. அப்படி தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சங்களில் எல்லாம் நிறைந்து வாழும் ஜெயலலிதாவை ‘அம்மா’ என்று சொன்னாலே இன்றைக்கு அத்தனை பேரின் கண் முன்னேயும் தமது உருவம் தோன்றுகிற அற்புதத்தை நிகழ்த்திய அவர்களை இந்த நல்ல நாளில் நினைவு கூர்வோம்.

அத்தகைய சிறப்பு வாய்ந்த ஜெயலலிதாவின் அடியொட்டி செயல்படுகிற நாம், தாய்மையை மகிழ்ந்து கொண்டாடுவோம். தாயுள்ளத்தோடு நம்மிடம் அன்பு காட்டுகிற, ஆசிர்வதிக்கிற அனைவரையும் போற்றி வணங்கிடுவோம். அவர்களின் வாழ்த்துகளைப் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்திடுவோம் ! இவ்வாறு தினகரன் கூறுகிறார்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே