மக்களின் ஊரடங்கு என்ற பிரதமர் மோடியின் அறிவுறுத்தலை ஏற்று நாளை மறுநாள் தமிழகத்தில் ஓட்டல்கள், கடைகள் மூடப்படும் என்றும், தனியார் பால் விநியோகம் கிடையாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாநில அரசு எடுக்கும் நல்லெண்ண நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் சூழலில் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 193 ஆக உயர்ந்துள்ளது.

கேரளா, தமிழகம்,கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வைரஸ் பரவியுள்ளது.

இதனால் அனைத்து மாநில அரசும் மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.

கொரோனா பரவிய எல்லா மாநிலங்களிலும் பள்ளி, வணிக வளாகங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது.

கொரோனா குறித்து மக்கள் பீதியடைந்திருந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மக்களிடம் உரையாடினார்.

அதில், கொரோனா இந்தியாவுக்கு வராது என்று நினைக்க வேண்டாம். மிகவும் மோசமான நிலையில் இருக்கிறோம். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வெளியே வர வேண்டாம்.

முடிந்தவரை 22 ஆம் தேதி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று தெரிவித்தார்.

மேலும், 22 ஆம் தேதி சுய ஊரடங்கு முறையைப் பின்பற்றுவோம் என்றும் கூறினார். கொரோனாவை தடுக்கும் இந்த நடவடிக்கை மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

வருகின்ற 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 7 மணி முதல் இரவு  9 மணி வரை பொதுமக்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென பாரத பிரதமர் கேட்டுக் கொண்டதின் அடிப்படையில், 

நாள் ஒன்றுக்கு விற்பனையாகும் சுமார் 1 1/2 கோடி லிட்டர் பாலையும் பொதுமக்களுக்கு காலை 7 மணிக்குள் கொண்டுபோய் சேர்ப்பது என்பது இயலாத காரியம் என்பதால் கொரோனா வைரஸ் பரவலை தடுத்திட மக்கள் மத்திய அரசு எடுக்கும் நல்லெண்ண நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும் விதமாக வருகிற 22-ஆம் தேதி காலை 7 மணிக்கு மேல் முற்றிலுமாக பால்  விநியோகத்தில் ஈடுபடப் போவதில்லை என்றும்; 

அதே நேரத்தில் அத்தியாவசிய உணவுப் பொருளான பால் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி கிடைக்க ஏதுவாக தமிழகம் முழுவதும் 21ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை மாலை என இருவேளைகளிலும் கூடுதலாக பால் கொள்முதல் செய்து அன்றைய தினம் இரவு கூடுதல் நேரமும்,

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணி முதல் காலை 6:30 மணி வரையிலும் பால் வினியோகம் செய்திடும் பணியை பால் முகவர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே