தைப்பூச திருவிழாவில் பங்கேற்க குவியும் லட்சக்கணக்கான பக்தர்கள்

முருகப் பெருமானுக்கு உகந்தநாள் தைப்பூசம்…தைமாதம் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழா தைப்பூசம்.

தைப்பூச நன்னாளில் விரதமிருந்து முருகன் கோவில்களுக்கு காவடி எடுத்தும், பால்குடம் ஏந்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர் பக்தர்கள்.

தைப்பூசத்தில் முருகனைக் காண பக்தர்கள் குவிந்திருப்பதால் அறுபடை வீடுகள் விழாக்கோலம் பூண்டிருக்கின்றன.

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், முருகன் தெய்வானையுடன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.

சூரபத்மனை போரில் வெல்வதற்கு முன்னும் பின்னும் முருகப்பெருமான் தங்கிய இடமாக கூறப்படுவது இரண்டாம் படைவீடான திருச்செந்தூர்.

ஞானப்பழம் கிடைக்காத கோபத்துடன் ஆண்டிக்கோலம் பூண்டு தங்கிவிட்டதாக கூறப்படும் இடம் மூன்றாம் படை வீடான பழனி.

சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்த முருகப் பெருமான் நான்காம் படை வீடான சுவாமி மலையில் சுவாமிநாதனாக வீற்றிருக்கின்றார்.

திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகன் ஐந்தாம் படை வீடான திருத்தணியில் கோபம் தணிந்து சாந்தமாக அமர்ந்ததால் தணிகை என பெயர் பெற்றது என்பார்கள்.

அறுபடைவீடுகளில் ஆறாவது வீடாக விளங்குவது பழமுதிர்ச்சோலை. சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா என்று அவ்வையுடன் சாதுர்யத்துடன் உரையாடிய முருகன், இங்கு கோயில் கொண்டிருக்கிறார்.

தமிழகம் மட்டுமின்றி இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரியஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் உள்ள தமிழர்களால் விமர்சையாக கொண்டாடப்படுகிறது தைப்பூசத் திருவிழா.

தைப்பூசத் திருநாள் இன்று விமர்சையாக கொண்டாடப்படுவதையொட்டி முருகன் திருத்தலங்களில் பக்தர்கள் வெள்ளமெனத் திரண்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே