விஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி…!!

நெய்வேலியில் நடிகர் விஜய்யின் மாஸ்டர் சூட்டிங் நடக்கும் நெய்வேலி சுரங்கத்தின் இரண்டாவது நுழைவாயிலில் விஜய் ரசிகர்கள் குவிந்ததால், அவர்களை கலைக்க போலீஸார் லேசான தடியடி நடத்தினர்.

நெய்வேலி என்.எல்.சி சுரங்கத்தில் விஜயின் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

நேற்று முன்தினம் சூட்டிங்கில் இருந்த விஜயை வருமான வரித்துறையினர் அழைத்துச் சென்று சென்னையில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.

பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏ.ஜி.எஸ் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையின் ஒரு பகுதியாக விஜயின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

நேற்று மாலை விஜயின் வீட்டில் சோதனை நிறைவடைந்தது. அவர் வீட்டில் ரொக்கம் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று வருமான வரித்துறையினர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், அன்புச்செழியனின் வீட்டில் இருந்து ரூ.77 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் வரி ஏய்ப்புக்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.

நடிகர் விஜய் நெய்வேலியில் நடந்து வரும் மாஸ்டர் படப்பிடிப்பில் இன்று காலை இணைந்துகொண்டார். படப்பிடிப்பு தொடர்ந்ததால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில், படப்பிடிப்பு நடக்கும் என்.எல்.சி சுரங்கத்தின் இரண்டாவது நுழைவாயில் முன்பு பாஜகவினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.

படப்பிடிப்பு நடத்த யார் அனுமதி கொடுத்தது? என்றும் இங்கே படப்பிடிப்பை நடத்தக் கூடாது என வலியுறுத்திம் பாஜகவினர் நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாஜகவுக்கு எதிராக விஜய் ரசிகர்களும் போட்டி போராட்டம் நடத்தினர்.

ஒரு கட்டத்தில் பாஜகவினர் கலைந்து சென்ற பின்னரும், விஜய் ரசிகர்கள் நுழைவாயிலில் குவிந்ததால், அவர்களை கலைக்க போலீஸார் லேசான தடியடி நடத்தினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே