காஷ்மீரில் அனைத்து கட்டுப்பாடுகளையும் 7 நாட்களில் மறுஆய்வு செய்ய வேண்டும் – உச்ச நீதிமன்றம்

இணையதள சேவை, பத்திரிகைகள் முடக்கப்பட்டது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிரடியாக நீக்கியது.

மேலும் அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்து அரசாணை வெளியிட்டது.

இவற்றை அமல்படுத்தும் நடவடிக்கையாக ஜம்மு காஷ்மீரின் அரசியல் கட்சி தலைவர்கள், பிரிவினைவாத தலைவர்கள் உள்ளிட்டோரை மத்திய அரசு வீட்டு காவலில் வைத்தது. சிலர் கைது செய்யப்பட்டனர்.

இணையதள சேவை, மொபைல் வசதி, பத்திரிகைகள் முடக்கப்பட்டன. பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் 40க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை நீதிபதிகள் என்.வி.ரமணா, ஆர்.சுபாஷ் ரெட்டி. பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

இதன் விசாரணை கடந்த ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி நிறைவடைந்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர். அதில் இணையம் என்பது கருத்துரிமையின் ஒரு பகுதி.

இணையதளம் மூலம் கருத்து சுதந்திரம் என்பது அரசியல் சாசனம் 19-ன் கீழ் வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் தனிநபர் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பை சமமாக பார்க்க வேண்டியுள்ளது.

தனிநபர் சுதந்திரத்தையும், தனிநபர் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியது நீதிமன்றத்தின் கடமை ஆகும்.

இதில் அரசிற்கும் பொறுப்பு இருக்கிறது. இணையதளம் உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்கும் போது அரசு முறையாக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

ஜம்மு காஷ்மீரில் இணையதள சேவை முடக்கத்தை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

காஷ்மீரில் விதிக்கப்பட்ட அனைத்துவிதமான கட்டுப்பாடுகளையும் நீக்குவது பற்றி 7 நாட்களுக்குள் மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே