ரஜினிகாந்த்-க்கு கமல் வைத்த கோரிக்கை!

ரஜினிகாந்த் தமிழ்நாட்டில் அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் தனியார் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்று, கேள்விகளுக்கு பதிலளித்தார்.

தமிழகம் திராவிட அரசியலை அடிப்படையாகக் கொண்டது எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன், அரசியலில் ரஜினிகாந்துடன் இணைந்து செயல்பட மீண்டும் விருப்பம் தெரிவித்தார்.

வேறு எங்கோ பிறந்திருந்தாலும், ரஜினிகாந்த் தற்போது பெருமைமிகு தமிழராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ரஜினிகாந்த் தமிழகத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்றும், ஏனெனில் தமிழகம் அவருக்கு உதவி செய்திருக்கிறது என்றும் கமல்ஹாசன் கூறினார்.

ரஜினிகாந்த் தமிழகத்தில் முதலீடு செய்ய வேண்டும் என தாம் விரும்புவதாகவும் அதற்காக அவரை வலியுறுத்தியதாகவும் கூறிய கமல்ஹாசன், ரஜினிகாந்தும் அந்த மனோநிலையிலேயே இருப்பதாக தெரிவித்தார்.

இதுகுறித்து, சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த கமல்ஹாசனிடம்  செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

தமிழகத்தின் உயர்வுக்காக வியர்வையை, உழைப்பை, இயன்றவர்கள் செல்வத்தை முதலீடு செய்ய வேண்டும் என்றும், அதையே தாம் ரஜினிகாந்திற்கும் கூறியதாகவும் கமல்ஹாசன் பதிலளித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே