ஜனவரியில் அமலுக்கு வருகிறது ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம்!

மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தை, முதல் கட்டமாக ஜனவரி 15ம் தேதி முதல் 12 மாநிலங்களில் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டம் முதல்கட்டமாக ஜனவரி 15ம் தேதி முதல் ஆந்திரா, தெலங்கானா, குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா, கோவா, மத்திய பிரதேசம், திரிபுரா, ஜார்க்கண்ட் ஆகிய 12 மாநிலங்களில் அமல்படுத்தப்பட உள்ளது. 

இதன் மூலம் 4 கோடி மக்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் மாதத்துக்கு பின் நாடு முழுவதும் இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. 

இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த ரேசன் கார்டுகளை குடும்பத் தலைவரின் ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டியுள்ளது. 

தமிழகத்தில் இதற்கான பணிகள் இன்னும் நிறைவடையாததால், அடுத்த கட்ட திட்டத்தில் தமிழகமும் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அந்தந்த மாநிலங்களில் வசிப்போர் வழக்கம் போல் உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும், அதில் எந்த பாதிப்பும் வராது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதே நேரத்தில் ஒரு மாநிலத்தில் பதிவு செய்துள்ள பயனாளி மற்றொரு மாநிலத்தில் உணவுப் பொருட்களை வாங்கும் போது மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மட்டுமே உணவு பொருட்களை பெற முடியும். 

மாநில அரசுகள் தங்கள் மாநில மக்களுக்கு வழங்கும் நலத்திட்டத்தின் கீழ், பிற மாநிலத்தவர்கள் உணவுப் பொருட்களை பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே