கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிக்கு தூக்கு தண்டனை

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சந்தோஷ்குமாருக்கு தூக்குத் தண்டணை விதித்து கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. 

கோவை துடியலூர் அடுத்த பன்னிமடை பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி, கடந்த மார்ச் 25ஆம் தேதி வீட்டில் விளையாடி கொண்டிருந்தபோது காணாமல் போனார்.

அடுத்த நாளே வீட்டின் பின்புறத்தில் கை, கால்கள் துணியால் கட்டப்பட்ட நிலையில், சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தெரியவர, அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். 

இவ்வழக்கை போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், இவ்வழக்கில் கைதான சந்தோஷ்குமார் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பளித்தார்.

எனினும், இவ்வழக்கில் தண்டனை விவரம் இன்று மாலை அறிவிக்கப்படும் என்ற நிலையில், 302-வது பிரிவின் படி குற்றவாளிக்கு தூக்குத் தண்டைனை விதித்து நீதிபதி ராதிகா தீர்பளித்தார்.

இதற்கிடையே இவ்வழக்கில் குற்றவாளியான சந்தோஷ்குமாரை தவிர்த்து, மற்றொரு நபருக்கும் தொடர்பிருப்பது டிஎன்ஏ பரிசோதனையில் தெரியவந்ததையடுத்து, அந்நபரையும் கைது செய்ய வலியுறுத்தி சிறுமியின் தாயார் சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த மனு மீதான மேல் விசாரணைக்கும் நீதிபதி ராதிகா உத்தரவிட்டுள்ளார்.

போக்சோ வழக்குகளை விசாரிக்க கோவையில் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் சார்பில் வழங்கப்பட்ட முதல் தீர்ப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே