புத்தக கண்காட்சிக்கு தமிழக அரசு சார்பில் 75 லட்சம் ரூபாய் வழங்கப்படும் : முதல்வர் பழனிசாமி

புத்தக கண்காட்சிக்கு தமிழக அரசு சார்பில் 75 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். 

சென்னை நந்தனம் YMCA மைதானத்தில், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தும் புத்தக கண்காட்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

தொடர்ந்து அவர்,  தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் 3000 சதுரடியில் அமைக்கப்பட்ட கீழடி தொல்பொருள் அகழ்வாய்வு கண்காட்சியை திறந்து வைத்து, அதில் இடம்பெற்றுள்ள அரங்குகளை பார்வையிட்ட அவர், ஒரிசாவைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் வடிவமைத்த திருவள்ளுவரின் மணல் சிற்ப உருவத்தையும் மக்களின் பார்வைக்கு திறந்து வைத்தார். 

இதனை தொடர்ந்து சிறந்த பதிப்பாளர்கள், எழுத்தாளர்களுக்கு விருதுகளை வழங்கி உரையாற்றிய முதல்வர், புத்தகம் இல்லை எனில் மனித குலம் இந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்திருக்க முடியாது எனக் கூறினார்.

தமிழக அரசு சார்பில் 25 கோடி ரூபாய் செலவில் நூலகங்களுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டு வருவதை சுட்டிகாட்டிய அவர், வீட்டிற்கு ஒரு நூலகம் அமைக்கும் சிந்தனை மனதில் உருவாக வேண்டும் என்றார்.

அடுத்த ஆண்டு முதல் புத்தக கண்காட்சிக்கு 75 லட்ச ரூபாய் வழங்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே