இந்தியாவில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 6,148 பேர் உயிரிழப்பு..!!

நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக 6,148 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொரோனா நோய்த் தொற்று தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 94 ஆயிரத்து 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 367 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தொடர்ந்து 28-வது நாளாக குணமடைவோரின் எண்ணிக்கை தினசரி பாதிப்பு எண்ணிக்கையை விட அதிகமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

எனினும் முன் எப்போதும் இல்லாத அளவாக, கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 148 பேர் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 59 ஆயிரத்து 676-ஆக உள்ளது.

இந்தியாவில் இதுவரை 2 கோடியே 91 லட்சத்து 83 ஆயிரத்து 121 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 2 கோடியே 76 லட்சத்து 55 ஆயிரத்து 493 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 11 லட்சத்து 67 ஆயிரத்து 952 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாட்டில் தற்போதைய கொரோனா நோய்த்தொற்று விகிதம் 4.69 ஆகவும், குணமடைதல் விகிதம் 94.77 ஆகவும், இறப்பு விகிதம் 1.23 ஆகவும் உள்ளது. நாடு முழுவதும் இதுவரை 23 கோடியே 90 லட்சத்து 58 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே