மயிலாடுதுறை இரும்புக்கடையில் 5000 பள்ளி பாடப்புத்தகங்கள்..!!

மாணவர்களுக்கு அரசு இலவசமாக வழங்கும் புத்தகங்கள், இரும்புக் கடையில் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலக இளநிலை உதவியாளர் மேகநாதனை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை, முத்துவக்கீல் பகுதியில் ஒரு இரும்புக் கடை இருப்பதாகவும் பெருமாள்சாமி என்பவருக்கு சொந்தமான அந்த கடையில் இலவச பாடப் புத்தகங்கள் பண்டல் பண்டலாக குவித்து வைக்கப்பட்டிருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

அந்த புகாரின் பேரில், இரும்புக் கடைக்கு விரைந்து சென்ற கோட்டாட்சியர் தலைமையிலான குழு அங்கிருந்த பாடப்புத்தகங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.

அங்கு 2019 – 20ஆம் கல்வியாண்டின் 5 ஆயிரம் பாடப் புத்தகங்கள் இருந்ததாகவும் மொத்தம் 6 முதல் 12ம் வகுப்பை சேர்ந்தவை என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனையடுத்து, கோட்டாட்சியர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், இரும்புக் கடை உரிமையாளரான பெருமாள் சாமியையும் அங்கிருந்து பணியாட்களையும் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது, மாவட்ட கல்வி அலுவலக இளநிலை உதவியாளரான மேகநாதன்தான் புத்தகங்களை விற்றார் என்பது அம்பலமாகியுள்ளது.

அதனிடப்படையில் மேகநாதனை கைது செய்த போலீசார், அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இரும்புக் கடை உரிமையாளர் பெருமாள்சாமியும் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தகங்களை விற்ற குற்றத்திற்காக மேகநாதன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே