மருத்துவப் படிப்புகளில் ஓ.பி.சி பிரிவுக்கு 50% இட ஒதுக்கீடு வேண்டும்!

தமிழகத்தில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு நடைமுறையில் உள்ள இடஒதுக்கீட்டைப் போலவே மருத்துவப்படிப்புகளில் மத்திய தொகுப்பில் இருந்தும் 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.

மேலும் நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மருத்துவப் படிப்பு சேர்க்கையில் மத்தியத் தொகுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது குறித்து மக்களவையில் பேசிய தி.மு.க உறுப்பினர் டி.ஆர்.பாலு, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 15-ன் உட்பிரிவு 5-ன்படி, கல்வி இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டுள்ள 27 சதவீதம் இடஒதுக்கீடு பொதுத் தொகுப்பில் இருந்து ஏன் வழங்கப்படவில்லை என கேள்வி எழுப்பினார்.

சமீபத்தில் அமலான பொருளாதாரத்தில் நலிந்தோருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு மட்டும் தவறாமல் வழங்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார்.

மாநில மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் மொத்த இடங்களில் பொதுப்பிரிவுக்கு 15% இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு அறிவுறுத்தியது.

2017-18-ல் பொதுப்பிரிவில் 9,966 இடங்கள் மத்திய அரசுக்குக் கிடைத்தது.

அதில் 2,689 இடங்கள் 27% ஓபிசி-க்கு ஒதுக்கப்பட்டிருக்கவேண்டும்.

ஆனால் ஓபிசி-க்கான 2,689 இடங்களில் 260 இடங்கள் மட்டுமே மத்திய நிறுவனங்களில் ஒதுக்கப்பட்டன.

ஆனால் மாநில கல்வி நிறுவனங்களுக்குத் தரப்படவில்லை.

2018-19 கல்வியாண்டிலும் பொதுத் தொகுப்பில் இருந்து மாநில மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்களை மத்திய அரசு ஒதுக்கவில்லை என டி.ஆர். பாலு கூறினார். 

தமிழகத்தில் மாநில சட்டப்படி இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்குவது போல், மருத்துவப் படிப்பில் 50 சதவிகித இடங்களை ஒதுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

தங்களுடைய கோரிக்கை அரசியலமைப்புச் சட்ட வரன்முறைக்குட்பட்டது எனக் கூறிய பாலு மத்திய அரசு அதற்கு எதிராக செயல்படக்கூடாது என்றும் வலியுறுத்தினார்.

அடுத்த கல்வியாண்டிலாவது பிற்படுத்தப்பட்டோருக்கான 50 சதவீத இடஒதுக்கீடு மத்திய தொகுப்பில் இருந்து வழங்கவேண்டும் என டி.ஆர். பாலு கேட்டுக்கொண்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே